வித்தியாசமான முறையில் நோய்களை குணப்படுத்திய சாய்பாபா பற்றி தெரியுமா..?


எந்த துன்பம் வந்தாலும் சரி….
மனதில் சலனம் கொள்ளாதீர்கள்.
என்னையே நினையுங்கள்.

என் மீதான நம்பிக்கையில்
கொஞ்சம் கூட குறைவு இருக்கக் கூடாது.
அத்தகையவர்களுக்கு எனது உதவி
எந்த வடிவிலாவது நிச்சயம் கிடைக்கும்.
உங்களது கர்மத்தை
உங்களுக்கு பதில் நான் சுமக்கிறேன்.

– சீரடி சாய்பாபா

தன் பக்தர்களிடம் இவ்வாறு அடிக்கடி சொல்வதுண்டு. குறிப்பாக உடல் நலம் குன்றி தன்னை நாடி வருபவர்களிடம் பாபா இந்த கருத்தை வலியுறுத்த தவறுவதே இல்லை.

கடவுள் அவதாரமான சாய்பாபா மக்களின் நோய்களைத் தீர்க்கும் விஷயத்தில் பெரிய அற்புதங்கள் எதையும் திட்டமிட்டு செய்ததே இல்லை. அவர் நினைத்தால், அவரது கடைக்கண்ணின் ஒரு பார்வையே போதும். பக்தர்களின் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

ஆனால் நோய்களைத் தீர்க்கும் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் ஆச்சரியம் தருவதாக இருந்தன. நோயாளிகளிடம் அவர் காட்டிய அணுகுமுறை மற்றவர்களிடம் பயத்தையும் பீதியையும் கூட ஏற்படுத்தியது.


ஏனெனில் சாய்பாபா அத்தகைய வித்தியாசமான மருத்துவத்தை செய்தார். எதை செய்தால் நோயாளிக்கு ஆபத்து என்று நாம் பயப்படுவோமோ சாய்பாபா அதையே தேர்வு செய்து செய்வார். அடுத்த ஓரிரு நாட்களில் ஆச்சரியப்படும் வகையில் நோய் குணமாகி விடும். ஒரு தடவை, ரெண்டு தடவை அல்ல…. தம் வாழ்நாள் முழுக்க சாய்பாபா இந்த அணுகுமுறையையே கையாண்டார்.

சில சமயம் அவர் செய்யும் மருத்துவம் முரட்டுத்தனமாக இருக்கும். பாபாவைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் அமைதியாக இருப்பார்கள். மற்றவர்கள் ஒருவித பயத்தில் துடித்துப் போவார்கள். பாபா சீரடிக்கு வந்த புதிதில் அவரை ஏதோ ஆன்மிகவாதி என்ற அளவில் மட்டுமே மக்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஒருநாள் சீரடியைச் சேர்ந்த ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்பட்டபோது, பாபாவிடம் அழைத்துச் சென்று திருநீறு போடலாம் என்று அவரை தூக்கி வந்தனர்.

ஏதோ ஒரு பச்சிலையைச் சாறு எடுத்துக் கொடுத்து அவரது நோயை பாபா தீர்த்து வைத்தார். மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அந்த நோயாளி அடுத்த ஒரு மணி நேரத்தில் உயிர் பிழைத்து சகஜமானார். இந்த சம்பவத்துக்குப் பிறகு சாய்பாபாவை நம்பி சீரடி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து நோயாளிகள் வரத் தொடங்கினார்கள். அதன் பிறகே பாபாவின் மருத்துவம் அச்சுறுத்துவது போல மாறியது.

ஒருமுறை சீரடியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் கண்கள் வீங்கி சிவந்து போனது. கண்ணீர் தாரை, தாரையாக வழிந்தது. அவரது பார்வை பறி போய் விடுமோ என்றே எல்லோரும் நினைத்தனர். பாபா அவர் கண்களை உற்றுப் பார்த்தார். பிறகு சுற்றும் முற்றும் பார்த்தார். சுவர் ஓரத்தில் “செங்கொட்டைக்காய்” எனும் காய் கிடந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்த காயை அரைத்து துணிகளை சலவை செய்வதற்கு பொதுமக்கள் பயன்படுத்துவார்கள்.


அந்த காயை எடுத்த பாபா, அதை நன்றாக அரைத்து பசை போல தயாரித்தார். பிறகு அதை சற்று இறுகலாக மாற்றினார். அந்த பசையை எடுத்து விவசாயியின் இரு கண்களிலும் அப்பி திணித்தார். அந்த பசை கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக விவசாயியின் கண்களைச் சுற்றி துணியால் இறுக்கிக் கட்டினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சீரடி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஏனெனில் செங்கொட்டைக்காய் என்பது மிகவும் விஷத்தன்மை கொண்டது.

அந்த விஷம் கண்களில் பரவினால் என்ன ஆகும்? சீரடி மக்களில் ஒரு சாரார், பாபாவின் இந்த சிகிச்சையை மிகவும் கடுமையாக விமர்சித்தனர். அவ்வளவுதான், விவசாயியின் இரு கண்களிலும் நிச்சயம் பார்வை பறிபோய் விடும்” என்றனர்.

பாபா அவர்களது உணர்வைப் புரிந்து கொண்டார். மெல்ல சிரித்தபடி “இரண்டு நாட்கள் கழித்து இவரை மீண்டும் அழைத்து வாருங்கள்” என்று கூறி அனுப்பி வைத்து விட்டார். சில நாட்கள் கழித்து அந்த விவசாயி பாபாவிடம் வந்தார். அவர் கண்களில் கட்டி இருந்த துணியை பாபா மெல்ல அவிழ்த்தார். தண்ணீரால் அவர் கண்களை மிகவும் சுத்தமாக கழுவி விட்டார்.

பிறகு “கண்ணைத் திறந்து பார்” என்று சாய்பாபா உத்தரவிட்டார். அந்த விவசாயி மெல்ல கண்ணைத் திறந்தார். இரு நாட்களுக்கு முன்பு சிவந்து போய் இருந்த அவர் கண்கள் பளீர் வெண்மை நிறத்துக்கு மாறி இருந்தன.

அது மட்டுமல்ல….

விவசாயியின் கண்களில் இருந்து வழிந்த நீரும் நின்று விட்டிருந்தது. தன் கண்களில் உள்ள எரிச்சல் விலகி, குளிர்ச்சியாக இருப்பதாக அந்த விவசாயி கூறினார். இதைக் கேட்டு சீரடி மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள்.


சீரடியில் வாழ்ந்த பாபாவின் பக்தர்களில் ராதாகிருஷ்ணமாயி எனும் பெண்மணி மிகவும் வித்தியாசமானவர். பாபாவுக்கு தேவையான உணவு சமைப்பது உள்பட எல்லா பணி விடைகளையும் செய்வது அவர்தான். ஒருநாள் அவர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். எழுந்து நடக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அவர், வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.

இந்த விஷயம் சாய்பாபாவுக்கு தெரிய வந்தது. உடனே அவர் ராதாகிருஷ்ண மாயியின் குடிசை வீட்டுக்கு வந்தார். சிலரை அழைத்து ஒரு ஏணியை கொண்டு வரும்படி கூறினார். அந்த ஏணி மூலம் கூரை மீது ஏறினார். கூரை உச்சியில் நின்றபடி ஏதோ கத்தினார். பிறகு கூரையின் மறுபக்கமாக கீழே இறங்கினார். ஏணி கொண்டு வந்தவர்களுக்கு தலா 2 ரூபாய் கொடுத்து அனுப்பினார்.

பாபாவின் இந்த செய்கை சீரடி மக்களுக்கு மிகவும் வினோதமாகப்பட்டது. பாபாவிடம் அவர்கள், “ஏன் குடிசை மீது ஏறினீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு பாபா கூறுகையில், “ராதாகிருஷ்ணமாயியின் மலேரியா காய்ச்சலை விரட்ட வேண்டும் அல்லவா? எனவேதான் கூரை மீது ஏறி அதை விரட்டி விட்டு வருகிறேன்” என்றார்.

சீரடி வாசிகள் இதைக் கேட்டு சிரித்தனர். “இது என்ன பைத்தியக்காரத்தனம்! வைத்தியம் பார்க்காமல் கூரை மீது ஏறி இறங்கினால் எப்படி காய்ச்சல் குணமாகும்?” என்றனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ராதாகிருஷ்ணமாயி அடுத்த ஒரு மணி நேரத்தில் மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெற்றவர் போல எழுந்து வந்தார்.


இதே போன்ற மற்றொரு சம்பவம் அவரது தீவிர பக்தர்களில் ஒருவரான ஷாமாவுக்கும் நடந்தது. ஷாமாவை ஒருநாள் திடீரென விஷப்பாம்பு ஒன்று கடித்து விட்டது. கடிபட்ட சுண்டு விரலில் இருந்து ஷாமா உடலின் மற்ற பாகங்களுக்கு விஷம் பரவத் தொடங்கியிருந்தது.

உடனே ஷாமாவுக்கு பாபாவின் நினைவுதான் வந்தது. அவர் பாபா இருக்கும் துவாரகமாயி மசூதிக்கு ஓடி வந்தார்.

மசூதி வாசல்படியில் அவர் கால் கை வைத்த மறுவினாடி, “ஏய்…. அங்கேயே நில், உள்ளே வராதே. ம்…. கீழே இறங்கு”… போ… போ…. விலகிப் போ” என்று பாபா கர்ஜித்தார்.

பாபாவின் இந்த திடீர் சீற்றத்தால் ஷாமா குழப்பம் அடைந்தார். பாபா உத்தரவால் ஏற்பட்ட ஏமாற்றம் அவரை குமுற வைத்தது.

“நாம் பாபாவைத் தானே கடவுள் போல நம்பி வந்தோம். ஆனால் அவரோ நம்மை விரட்டி விடுகிறாரே” என்று ஷாமா வேதனைப்பட்டார். கண்ணீர் மல்க அவர் மசூதி வாசலில் நின்றார்.-Source: manithan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!