பாபா பக்தர் ஒருவருக்கு செய்த கடைசி உதவி இதுதான்..!


பாபா துவாரகமாயி மசூதிக்கு வந்து என்றைய தினம் தங்க தொடங்கினாரோ, அன்று முதல் துவாரகமாயியை சுத்தம் செய்யும் பணியை லட்சுமிபாய் ஷிண்டே ஏற்றுக் கொண்டார். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் பாபாவை வணங்குவதை பிரதானமாக வைத்திருந்தார்.

லட்சுமிபாயிடம் பாபா, எப்போதாவது சாப்பிட உணவு வேண்டும் என்று கேட்பார். அதுவும் குறிப்பிட்டு இந்த வகை உணவுதான் வேண்டும் என்று கேட்பார்.

சில சமயம் லட்சுமிபாய் சமைத்து கொண்டு வந்து கொடுக்கும் உணவை நாய், பூனை போன்ற பிராணிகளுக்குப் போட்டு விடுவார். லட்சுமிபாயும் அதை கண்டு கொள்ள மாட்டார்.
பாபா சீரடிக்கு வந்த தொடக்க நாட்களில் அவருக்கு உணவு கொடுக்க பல பெண்கள் மறுத்துள்ளனர். ஆனால் அவரது மகிமை தெரிந்த பிறகு பலரும் போட்டி போட்டுக் கொண்டு பாபாவுக்கு உணவு கொடுத்தனர்.

பாபா தினமும் 5 வீடுகளுக்கு சென்று பிச்சை எடுத்து சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தார். ‘‘பசிக்கு உணவு அளிப்பவர்கள் கடவுளுக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்’’ என்று அர்த்தம் என பல தடவை பாபா கூறியுள்ளார்.

சாய்பாபாவிடம் லட்சுமிபாய் ஷிண்டே எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் சேவை செய்து வந்தார். இதனால் அவர் மீது பாபாவுக்கு பாசம் அதிகம் இருந்தது.
தனது இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த பாபா ஒருநாள் லட்சுமிபாய் ஷிண்டேயை அழைத்தார். அவரிடம் ஒரு ரூபாய் நாணயமாக 9 நாணயங்களை பாபா எடுத்துக் கொடுத்தார்.

‘‘இதை வைத்துக் கொள்’’ என்று கூறி ஆசீர்வதித்தார். பாபா தன் பக்தர்களில் ஒருவருக்கு செய்த கடைசி உதவி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.


இத்தகைய சிறப்புடைய லட்சுமிபாய் ஷிண்டே வீடும் சீரடி தலம் அருகிலேயே உள்ளது. லட்சுமிபாய் ஷிண்டே மரணம் அடைந்ததும், அவர் உடலை அவரது வாரிசுகள் வீட்டிலேயே அடக்கம் செய்து சமாதி கட்டி வைத்துள்ளனர்.

மேலும் பாபா கொடுத்த 9 நாணயங்களையும் அவர்கள் அங்கு பத்திரப்படுத்தி வத்துள்ளனர். சீரடிக்கு செல்பவர்கள் மறக்காமல், தவறாமல் லட்சுமிபாய் ஷிண்டே வீட்டுக்கு சென்று விட்டு வரலாம். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!