மிடில் ஆர்டர் சொதப்பல்- சிஎஸ்கே-யின் தோல்வி குறித்து அலசல்..!


13-வது ஓவரின் முதல் பந்தில் வாட்சன் ஆட்டமிழந்ததும், மிடில் ஆர்டர் சொதப்பலாலும் சிஎஸ்கே தோல்வியை சந்தித்தது.

ஐபிஎல் 21-வது லீக் ஆட்டம் நேற்று அபு தாபியில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் 3-வது வெற்றிக்காக பலப்பரீட்சை நடத்தின. அபு தாபி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர மற்ற அணிகளின் சராசரி 175 ரன்களுக்கு கீழேதான். இதனால் முதலில் பேட்டிங் செய்யும் அணி 175 ரன்களை தாண்டினால் சேஸிங் செய்வது கடினம் எனக் கருதப்பட்டது.

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் பேட்டிங் தேர்வு செய்தார். சுனில் நரைனை பின்னக்குத் தள்ளி ராகுல் திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்கியது, மோர்கனை 5-வது வீரராக களம் இறக்கியது, தினேஷ் கார்த்திக் 7-வது வீரராக களம் இறக்கியது என பேட்டிங்கில் பல மாற்றங்கள் செய்தது கொல்கத்தா.

ராகுல் திரிபாதியைத் தவிர மற்ற எந்த மாற்றமும் ஒர்க்காகவில்லை. திரிபாதி 51 பந்தில் 81 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பவர் ஹிட்டர்களுக்கு எதிராக சிஎஸ்கே பவுலர்கள் அட்டகாசமான பந்து வீச்சை வெளிப்படுத்த மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 17 ரன்களை தாண்டவில்லை. இதனால் கொல்கத்தா அணி 167 ரன்கள் மட்டுமே அடித்தது.

பின்னர் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டு பிளிசிஸ், வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரியில் ஒரு பவுண்டரி, அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் என விளாசினர்.

சரி… கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அட்டகாசம் செய்ததுபோல், இந்த போட்டியிலும் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்திருந்த வேளையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 10 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போதே நங்கூரம் அறுந்த கப்பலானது சென்னை.

அடுத்து வாசனுடன் அம்பத்தி ராயுடு ஜோடி சேர்ந்தார். டு பிளிஸ்சிஸ் இல்லை என்றால் என்ன… நான் உங்களுடன் இருக்கிறேன் என அம்பத்தி ராயுடு வாட்சன் உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்தார். இதனால் சென்னைக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் ரன்கள் வந்து கொண்டே இருந்தது. பவர் பிளே-யான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த 4 ஓவரில் 36 ரன்கள் அடித்து 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இருவரும் கப்பலை தரை தட்ட விடமாட்டார்கள் என ரசிகர்கள் எண்ணினர்.

கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 78 ரன்களே தேவைப்பட்டது. எளிதான இலக்கை சென்னை எட்டிவிடும் என நினைத்த நிலையில், யார் கண்பட்டதோ…. வாட்சன், அம்பதி ராயுடு ஆட்டத்தில் மந்தநிலை ஏற்பட்டது. 11-வது ஓவரில் 4 ரன்களும், 12-வது ஓவரில் 5 ரன்களுமே அடித்தனர். அப்போது நங்கூரம் இல்லாத கப்பல் தரைதட்டும் என்ற நிலைக்கு வந்தது.

13-வது ஒவரை நாகர்கோட்டி வீசினார். முதல் பந்தில் அம்பதி ராயுடு 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவர் ஏன் முன் வரிசையில் களம் இறங்க யோசிக்கிறார் என்ற தொடர் கேள்வி எழும்பியதால் என்னவோ? நாம் இறங்கினால் என்ன? என நினைத்த டோனி 4-வது வீரராக களம் இறங்கினார்.

13-வது ஓவரை சுனில் நரைன் வீசினார். இந்த ஓவரில் சென்னைக்கு பேரிடி காத்திருந்தது. முதல் பந்தில் வாட்சன் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 11-வது ஓவரில் இருந்து தடுமாறிய கப்பல், 13-வது ஓவரில் முதல் பந்தோடு சிஎஸ்கே கப்பல் தரைதட்டியது.

அடுத்து சாம் கர்ரன் களம் இங்கினார். 16-வது ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்ஸ் அடிக்க ரசிகர்கள் சற்று உற்சாகமடைந்தனர். கடைசி 24 பந்தில் 48 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் உள்ளது. டோனி, சாம் கர்ரன் ஒரு ஓவரை டார்கெட் செய்தால் வெற்றிக்கனியை பறித்து விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு, டோனி 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட சற்று நம்பிக்கை அதிகரித்தது.

ஆனால், அடுத்த பந்தில் டோனி ஸ்டம்பை பறிகொடுத்தார். அவரால் 12 பந்தில் 11 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. அத்துடன் சென்னை கப்பல் தரைதட்டி இழுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

அடுத்த ஓவரில் சாம் கர்ரன் 11 பந்தில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, வழக்கம்போல் கேஜர் ஜாதவ் வந்து நிற்க, ரசிகர்களின் கைத்தட்டலுக்கு ஜடேஜா கடைசி மூன்று பந்தில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

வாட்சன் ஆட்டமிழந்தது, அதன்பின் மிடில் ஆர்டர் சொதப்பலால் சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது வெற்றியை பறிகொடுத்துள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!