போலீசாரின் அலட்சியம்..? முடி, ரத்த மாதிரியை திருப்பி அனுப்பிய தடயவியல் ஆய்வகம்


போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறிய அனுப்பப்பட்ட நடிகைகளின் முடி, ரத்த மாதிரியை ஐதராபாத் தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு போலீசாரின் அலட்சியம் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையடுத்து, நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோர் போதைப்பொருட்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை கண்டறிய, கடந்த மாதம் (செப்டம்பர்) பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்களது ரத்த மாதிரி, சிறுநீர், முடி, செல்போன்கள் உள்ளிட்டவை தடயவியல் ஆய்வுக்காக ஐதராபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பி வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தடயவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்திருந்த நடிகைகளின் ரத்த மாதிரி, முடியை தடயவியல் ஆய்வகம் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆய்வுக்காக, அவற்றை முறையான பாதுகாப்புடன் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. நடிகைகளின் ரத்த மாதிரி, முடி உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவரில் வைத்து போலீசார் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் பிளாஸ்டிக் கவரில் அனுப்பியதால், அவற்றை சரியாக ஆய்வு செய்ய முடியாது என்றும், பாதுகாப்பான முறையில் அனுப்பும்படி போலீசாருக்கு, தடயவியல் நிபுணர்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நடிகைகளுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அவர்களது ரத்த மாதிரி, சிறுநீர், முடியை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்டதாகவும், அதனால் தான் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டவை திரும்பி வந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

போதைப்பொருள் விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் கைதானவர்களின் ரத்த மாதிரி, முடி, செல்போன்கள் தடயவியல் ஆய்வுக்காக ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சில தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக முடியை மட்டும் தடயவியல் ஆய்வகம் திருப்பி அனுப்பி வைத்துள்ளது. அந்த பிரச்சினையை சரி செய்து பாதுகாப்புடன் மீண்டும் முடி மட்டும் தடயவியல் பரிசோதனைக்காக ஐதராபாத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி சேனல்களில் வரும் தகவல்கள் உண்மை அல்ல. போதைப்பொருள் விவகாரத்தில் கைதானவர்களுக்கு எதிராக போலீசாருக்கு பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளது.

அந்த ஆதாரங்கள், தகவல்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. போதைப்பொருள் பயன்படுத்தியதை கண்டறிவதற்காக முதல் முறையாக தடயவியல் ஆய்வுக்காக முடி அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் போலீசாருக்கு நிறைய ஆதாரங்கள் கிடைத்திருந்தாலும், முடியை தடயவியல் பரிசோதனை செய்வதால் கூடுதலாக ஆதாரம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் போலீசார் அலட்சியமாக செயல்படவில்லை. போதைப்பொருள் விவகாரம் குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!