அகங்காரத்தை என் காலடியில் போடுங்கள்.. அவரது இதயத்தில் சென்று அமர்கிறேன் – சாய்பாபா..!


தென்னிந்தியாவின் ஷீர்டி என அழைக்கப்படும் சென்னை மைலாப்பூர் சாய்பாபா கோயில் 1941 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சாய்பாவிற்காக எழுப்பப்பட்ட கோயில்களில் மிகப் பழமையான கோயில்களுள் வெங்கடச அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள இக்கோயில் பிரதானமானது. சாய்பாபாவின் பக்தரான நரசிம்ம ஸ்வாமிஜி என்பவரால்தான் இக்கோயில் கட்டப்பட்டது. நரசிம்ம ஸ்வாமிஜி தொழில்முறையில் ஒரு வழக்கறிஞர்.

சந்நியாசியைப் போல வாழ்ந்துவந்த நரசிம்ம ஸ்வாமிக்கு, சீர்டி செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அங்கு அவருக்கு சித்தி கிடைத்தது. சென்னை திரும்பிய அவர் சாய்பாபாவைத் தினமும் பூஜிக்கத் தொடங்கினார்.


இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் இருந்த ஒரு புளிய மரத்தில் சாய்பாபாவின் படத்தை மாட்டி அதை நரசிம்ம ஸ்வாமிஜி பூஜித்து வந்துள்ளார். அதன் பிறகு அவர் வேறு ஒரு தெருவுக்குக் குடிபெயர்ந்துள்ளார். இருந்தாலும் அதே இடத்தில் சாய்பாபாவுக்குக் கோயில் கட்ட வேண்டும் என்பது பெரும் விருப்பம் இருந்துள்ளது. சில ஆண்டுகளில் அவருடைய நண்பரான ஜே.டி. பன்னாலால் உதவியுடன் அதற்கான முதல் கட்ட வேலைகளைத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு நரசிம்ம ஸ்வாமிஜியின் கடின உழைப்பால் இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. மனிதாபிமான சேவையே இக்கோயிலின் பிரதானமான நோக்கம் என நரசிம்ம ஸ்வாமிஜி கூறியுள்ளார்.


இவ்வளவு பெரிய காரியத்தைத் தனிமனிதனாகச் செய்துமுடித்திருந்தாலும் நரசிம்ம ஸ்வாமிஜியின் பெயரையோ அது பற்றிய குறிப்பையோ கோயிலின் உள்ளே எங்கும் காண முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயக் கோயிலாக இல்லாமல் சர்வ சமயங்களைச் சேர்ந்தவர்களும் தரிசித்துத் தங்கள் இன்னல்களைத் தீர்த்துச் செல்லும் தலமாக இக்கோவில் திகழ்கிறது.

அகந்தையை அழித்தல் வேண்டும். யாரொருவர் தன் அகங்காரத்தை என் காலடியில் போடுகிறாரோ அவரது இதயத்தில் சென்று அமர்கிறேன் நான் என்றவர் பாபா.- source: hindutamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!