தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது – முதல்வர் எடப்பாடி பேட்டி..!


சேலம் மாவட்டம் ஓமலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதில் வெற்றி பெற அனைவரும் முழு மூச்சுடன் உழைக்க வேண்டும், அந்த வெற்றிக்காக இனிவரும் நாட்களில் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் கட்சியினருக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுடன் தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தியுள்ளேன்.

காவிரி பிரச்சினையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்தார். அதில் 4 வாரத்தில் சுப்ரீம் கோர்ட் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. வருகிற மே மாதத்திற்குள் 80 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா தர வேண்டும், அந்த தண்ணீரை பெற தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 15 டி.எம்.சி. தண்ணீர் பெறவும், அதில் 7 டி.எம்.சி. தண்ணீரை உடனே திறந்து விடவும் வற்புறுத்தப்பட்டுள்ளது.


கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவித்த பிறகு அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் தினகரன். அவர் கூறும் கருத்துக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும்.

தற்போது தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்று நடந்த கூட்டத்தில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். அ.தி.மு.க.வின் அடிப்படை அமைப்பு முழுவதும் எங்கள் பக்கமே உள்ளது. தொண்டர்களும் எங்களுடன் தான் உள்ளனர். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் சிறப்பாக வழி நடத்தி செல்வோம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி, ஆட்சி இருக்காது என பலர் நினைத்தனர். மேலும் சிலர் பல்வேறு சூழ்ச்சிகள் செய்து அ.தி.மு.கவை அழித்து விடாலம் என்றும், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்றும் நினைத்தனர். ஆனால் அவர்கள் நினைத்தது ஒரு போதும் நடக்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து நான் எதுவும் கூற முடியாது.

அ.தி.மு.க. மதசார்பற்ற இயக்கமாகவே இயங்கி வருகிறது. பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

சேலம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவையை தொடங்க பல விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் விமான சேவை தொடங்கப்படும். தமிழகத்தில் விவசாயம் பாதிக்காதவாறு அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் பகிர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!