பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம்


வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் பிக்பாஸ், சினிமா மூலம் பிரசாரம் செய்ய கமல்ஹாசன் அதிரடி திட்டம் வகுத்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் வரும் சட்டமன்ற தேர்தலை குறி வைத்து பணிகளை தொடங்கி உள்ளார்.

தொகுதி வாரியாக தேர்தல் பார்வையாளர்கள், பிரசாரம் தொடக்கம் என வேகம் எடுக்கும் கமல்ஹாசன் அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் அடுத்து இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் தொடங்க இருக்கிறது. இவை தவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இவை அவரது அரசியல் வேகத்தை குறைக்குமா? என்று அவரது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறியதாவது:-

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, சினிமாவில் நடிப்பது எல்லாமே கட்சி செலவுக்காக தான். சட்டமன்ற தேர்தல் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் தான் தொடர்ந்து நடிக்கிறார். சினிமாவையும் பிக் பாசையும் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கிய ஊடகங்களாக தான் பார்க்கிறோம்.

இந்தியன் 2 மற்றும் கமல் ஹாசன் அடுத்து நடிக்க இருக்கும் படம் என 2 படங்களுமே கமலின் அரசியலை வலுவாக மாற்றும் படங்கள் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி பெண்களிடம் கமலை கொண்டு சேர்க்கும். நேரடியாக வீடுகளுக்கே கொண்டு செல்லும் நிகழ்ச்சி.

தேர்தலுக்காக கமல் ஹாசன் முன்பே சரியான திட்டமிடலுடன் இருந்தார். ஜூலை மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இருந்தால் அக்டோபரில் முடித்துவிட்டு பின்னர் தமிழகம் எங்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம், தேர்தலுக்கு முன்னதாக இந்தியன் 2 ரிலீஸ் என்று தெளிவாக திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் கொரோனாவால் அந்த திட்டங்கள் தடைபட்டு போயின. எனவே அடுத்த நான்கு மாதங்கள் மக்களிடம் குறிப்பாக, பெண்களிடமும் இளைஞர்களிடமும் உரையாடுவதற்கான களமாக பிக் பாஸைத்தான் பயன்படுத்த இருக்கிறார். கொரோனா காலத்தில், மற்ற அரசியல் தலைவர்களுக்கு இல்லாத வாய்ப்பு கமலுக்குக் கிடைத்திருக்கிறது. அதையே தன் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த இருக்கிறார்.

கடந்த பிக்பாஸ் சீசன்களிலேயே வார இறுதி நாட்களில் கமல் தோன்றும்போது நடப்பு அரசியலை பேசினார். இந்த முறை தேர்தல் நெருங்குவதால் அது அதிகமாகவே இருக்கும். கூட்டணி வி‌ஷயத்தில் தி.மு.க., அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு அணியை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறார்.

ரஜினிகாந்த், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை இணைத்து வலுவான மாற்று அணியை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஸ்டாலினா, எடப்பாடியா, 3-வது அணியா என 2021 தேர்தல் களம் அமையக் கூடாது.

ரஜினி-கமல் இணைந்த கூட்டணி வேண்டுமா, வேண்டாமா… என்பதை மட்டும்தான் சிந்திக்க வேண்டும். அந்த அளவுக்கு, இறங்கும்போதே பலமாக இறங்க வேண்டும் என்பது அவரது நோக்கம்.

நாம் கேள்விப்பட்ட வரை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தின் கதை கமல்ஹாசனே கூறிய கதை தான். அதற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் தான் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுள்ளார்.

கமல்ஹாசனின் அரசியலை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் படமாக அது அமையும். தேர்தலுக்கு முன்பே வெளியாகி தமிழ் நாட்டு மக்களிடம் கமல் ஹாசனை ஒரு தலைவராக கொண்டு சேர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!