கல்யாண வாழ்க்கை பற்றி ஓர் ஆணின் உருக்கமான கடிதம்… தவறாது படியுங்கள்..!


திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது.

பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது.

வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது.

அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர்வுக்காக எழுதியுள்ள கடிதம் இதோ,

எனது பெயர் முகுந்த், மின் பொறியாளராக பணியாற்றி வருகிறேன். கடந்த 2010 ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது.

முழுக்க முழுக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால் ஒருவரையொருவர் ஓரளவுக்குதான் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது.

ஏனெனில், நிச்சயதார்த்தம் முடிந்து 2 மாத இடைவெளியில் எங்கள் திருமணம் நடைபெற்றது.


திருமணம் முடிந்த பின்னர் சந்தோஷமான வாழ்க்கை அமையவில்லை, மாறாக சண்டைகளும், சச்சரவுகளும் ஆரம்பமானது.

எனது மனைவி சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபப்படுவாள். நான் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பி வருவதற்கு தாமதமானால், வார்த்தைகளால் என்னை சித்ரவதை செய்வாள்.

அலுவலகத்தில் இருக்கும்போது நான் அவளது அழைப்பை எடுக்கவில்லை என்றால், விடாப்பிடியாக நான் அழைப்பை எடுக்கும்வரை போன் செய்து கொண்டிருப்பாள்.

தாமதமாக வீட்டிற்கு வருவதை தாங்கிகொள்ளாத அவள், நான் வீட்டுக்கு வந்தவுடன் கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிபோட்டு உடைப்பாள்.

அந்த நேரத்தில் நான் பேசக்கூடாது என்பதற்காக அமைதியாக அறையில் போய் அமர்ந்துகொள்வேன். அது அவளை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது.

எனக்கு பெற்றோர் கிடையாது, இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரனுக்கு காது கேட்காது. இதனால் இருவரும் என்னோடு தான் தங்கியிருப்பார்கள் என திருமணத்திற்கு முன்னரே பெண் வீட்டாரிடம் நானும் எனது உறவினர்களும் தெரிவித்திருந்தோம்.

அதற்கு அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரே இந்த திருமணம் நடைபெற்றது. ஆனால், முதலில் இதனை ஏற்றுக்கொண்ட எனது மனைவியால் பின்னர் இதனை சகித்துக்கொள்ள முடியவில்லை.


இதனால் எனது சகோதரர்களையும் வார்தைகளால் காயப்படுத்துவாள். நான் அலுவத்தில் இருந்து தாமதமாக வருவதால், எனக்கும், அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் தவறான தொடர்பு உள்ளது என அவளாக கற்பனை செய்து கொண்டு என்னிடம் சண்டைபோடுவாள்.

ஒரு முறை எனது அலுவலகத்திற்கு வந்து, அங்கிருந்த பெண்கள் அனைவரிடம் சண்டைபோட்டு என்னைப்பற்றியும் தவறாக பேசினாள்.

இதனால் எனது சக ஊழியர்கள் முன்னிலையில் கூனி குறுகிபோய் நின்றேன். இந்த பெயர் கெட்டுவிட்டதே என கருதி அந்த வேலையை விட வேண்டிய நிலைக்கு ஆளானேன்.

எனது மனைவி இதுவரை 3 கம்பெனிகளில் பணியாற்றியிருக்கிறாள், ஆனால் இதுவரை எந்த ஒரு கம்பெனியிலும் 20 நாட்களுக்கு மேல் தாக்குபிடிக்கமாட்டாள்.

அவளுக்கு மனரீதியான பிரச்சனை இருக்கலாம் என கருதி, மருத்துவரிடம் சென்றோம். அங்கு அவளுக்கு சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதனை எடுத்துக்கொண்டாள்.

நாட்கள் ஆக ஆக, அவளின் சித்ரவதைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன, ஒருமுறை கையில் இருந்த பொருளை எடுத்து என்னை நோக்கி அடித்ததில், எனது தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றேன். இவளின் கொடுமையை 1 1/2 ஆண்டுகள் பொறுத்திருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விவாகரத்து செய்துவிடலாம் என முடிவு செய்தேன். ஆனால் அவளோ, கர்ப்பிணியாக இருக்கும்போது அவளை அடித்தேன், எனது சகோதரர்கள் அவளிடம் தவறாக நடக்க முயன்றனர், வரதட்சணை கொடுமை ஆகிய குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தினாள்.

பெண்களை பாதுகாக்க போட்டப்பட்ட சட்டங்களை அவள் ஆயுதமாக எடுத்துக்கொண்டு, எங்களுக்கு எதிரான அனைத்தையும் திசைதிருப்பி விட்டாள். நான் காவல்நிலையம் சென்று எனது மனைவியால் எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தால், அவர்களுக்கு என்னை பார்த்து சிரிப்பு தான் வந்தது.

உனது மனைவி உன்னை அடித்தது உண்மைதானா? நீ அடிவாங்கினாயா? என்பது போன்ற உதாசீனமான கேள்விகளை கேட்டனர்.

இறுதியில் எங்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்தது. எனக்கு பெண் குழந்தை இருப்பதால் சட்டப்படி பெண் குழந்தை தாயின் வசம் ஒப்படைக்கப்படும் என்பதால் அவளை பெறுவதற்கான முயற்சிகளை நான் மேற்கொள்ளவில்லை.

எனது மகள் அவளது தாய்வழி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக வசித்து வருகிறாள். ஒரு நரகமான வாழ்க்கையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்துள்ளது என்றாலும், எனது வாழ்க்கையும் சீரழிந்துவிட்டது என நினைத்து வருத்தப்படுகிறேன்.

இதனை எதற்காக உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் என்றால், பெண்கள் மட்டுமே ஆண்களால் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள் என்று சமுதாயம் கருதுகிறது, ஆனால் ஆண்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளது.

வன்முறைகள் என்று வந்துவிட்டதால் அது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். எனவே இருபாலருக்கும் பொருந்தும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!