ஆன்லைன் வகுப்பு புரியாததால் மாணவன் எடுத்த விபரீத முடிவு..!


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஆன்லைன் வகுப்பு புரியாததால் 11ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டியில் கரட்டிப்பட்டியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விக்கிரபாண்டி (16). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் விக்கிரபாண்டி தங்கி ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தார். ஆன்லைனில் எடுக்கும் பாடங்கள் புரியவில்லை என தந்தையிடம் விக்கிரபாண்டி கூறி வந்துள்ளார்.

ஆனால் இளங்கோவோ, நீ படித்துத்தான் ஆக வேண்டும் என மகனிடம் கண்டிப்புடன் கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்கிரபாண்டி, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதை கண்ட உறவினர்கள், மாணவனை மீட்டு தேனியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் வகுப்பு புரியாததால் ஏற்கெனவே ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!