நதியில் குளித்தபோது தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேருக்கு நடந்த பரிதாபம்..!


மருத்துவ படிப்புக்காக ரஷியா சென்ற சென்னை உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் அங்குள்ள நதியில் மூழ்கி பலியானார்கள்.

ஓட்டேரி குக்ஸ் சாலையை சேர்ந்தவர் மோகன். இவர், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ஸ்டீபன்(வயது 20). இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரஷியாவின் ஓல்கொகார்ட் பகுதியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தார்.

மருத்துவ பல்கலைக்கழக விடுதியில் தமிழக மாணவர்களுடன் தங்கி வந்தார். ஸ்டீபன் நேற்று முன்தினம் அங்குள்ள வோல்கா நதிக்கரைக்கு 10-க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்களுடன் சென்றார். பின்னர் நண்பர்கள் அனைவரும் நதியில் இறங்கி குளித்து விளையாடினர்.

அப்போது மாணவர் ஒருவர் நீரில் அடித்து செல்வதை பார்த்த ஸ்டீபன், அவரை காப்பாற்ற முயன்றார். அதில் ஸ்டீபனும் நீரில் அடித்துச்செல்ல, அதை கண்ட மேலும் 2 மாணவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

இதில் சென்னையை சேர்ந்த ஸ்டீபன், தாராபுரத்தை சேர்ந்த முகமது ஆஷிக், திட்டக்குடியை சேர்ந்த ராமு விக்னேஷ், மற்றும் மனோஜ் ஆனந்த் ஆகிய 4 பேரும் நதியில் அடித்துச்செல்லப்பட்டனர்.

சில மணிநேரத்துக்கு பிறகு ஸ்டீபன் உள்பட 4 பேரின் உடல்களும் கரை ஒதுங்கியது. 4 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலியான 4 பேரின் உடல்களை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் ரஷியா சென்ற சென்னை ஓட்டேரி மாணவர் ஸ்டீபன், சக மாணவனை காப்பாற்ற முயன்று நீரில் மூழ்கி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!