சாத்தான்குளம் கொலை வழக்கில் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட 4 போலீசார் கைது..!


சாத்தான்குளம் வழக்கில் தற்போது எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் உள்பட காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாரின் எண்ண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். போலீசார் 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், எஞ்சிய காவலர்களை கைது செய்யும் பணி நேற்று இரவு முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு எஸ்.ஐ.யான பால கிருஷ்ணனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அவர் தலைமறைவிட்டதாக வெளியான தகவலுக்கு மத்தியில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், காவல் நிலையத்தில் பணி புரிந்த காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரும் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைவரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் விசாரணையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் உள்ளடக்கம் எனவும், அவரிடமும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகிய நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!