உடுமலை சங்கர் கொலை வழக்கில் நடந்தது என்ன..?


உடுமலை சங்கர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில் 5 பேரின் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஐகோர்ட் குறைத்துள்ளது.

திருப்பூரில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கா் மற்றும் கவுசல்யா தம்பதியினா் மீது கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கணவர் சங்கா் உயிாிழந்தாா். மாநிலத்தையே உலுக்கிய இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக திருப்பூா் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களில் 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்தது. மேலும் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினா் பாண்டிதுரை, பிரசன்னா ஆகிய 3 போ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, மரண் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரில், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் மரண தண்டனையை ரத்து செய்து அவரை விடுவித்து உத்தரவிட்டது.

மேலும், 3 பேரை விடுவித்ததற்கு எதிராக காவல்துறை தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர்களை விடுவித்தது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!