சென்னையில் 750 திருமண மண்டபங்களில் கொரோனா முகாம்கள்! அதிரடி உத்தரவு போட்ட அரசு!!


அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை.

நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்கனவே 2,757 பேர் பாதிக்கப்பட்டு இருந்தநிலையில், நேற்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 203 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023 ஆக உயர்ந்தது.

மேலும் நேற்று ஒருவர் உயிர் இழந்தார். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்து உள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் நிலைமை மோசம் அடைந்து வருகிறது. குறிப்பாக வட சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்குள்ள படுக்கைகள் நிரம்பிவிட்டதாலும், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் புதிதாக படுக்கைகளை அமைப்பதற்கான மாற்று இடங்களை தேட வேண்டிய கட்டாய நிலை அரசுக்கு ஏற்பட்டு உள்ளது.


நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திலும் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், கொரோனா வேகமாக பரவி வருவதால் கூடுதலாக 50 ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

சென்னை மாநகராட்சி வடக்கு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குறுகிய தெருக்களில் முதலுதவி சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு அளிக்கும் வகையில் 108 இரு சக்கர ஆம்புலன்ஸ் வாகனங்களை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு சிறப்பு அலுவலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகளில் 50 ஆயிரம் படுக்கைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 95 சதவீதத்துக்கும் மேலாக எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தேவையில்லை. இவர்கள் சாதாரணமாகவே குணமடைந்து விடுவார்கள். இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்குத்தான் மாநகராட்சி சார்பில் 50 ஆயிரம் படுக்கைகள் தயார் செய்யப்படுகிறது.

தற்போது வரை 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அடுத்த வாரத்துக்குள் 10 ஆயிரம் படுக்கைகள் தயாராகிவிடும். நேற்று (அதாவது நேற்று முன்தினம்) சில நோயாளிகளை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கும், சித்த மருத்துவ கல்லூரிக்கும் மாற்றி உள்ளோம்.


முதல் 25 ஆயிரம் படுக்கைகளை இதுபோன்ற கல்லூரிகளிலும், அடுத்த 25 ஆயிரம் படுக்கைகளை அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளிலும் அமைக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

இதேபோல் சென்னையில் உள்ள 750 திருமண மண்டபங்களும் மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, முகாம்களாக மாற்றப்பட்டு அங்கு படுக்கைகள் தயார் செய்யப்படும்.

மாநகராட்சி முகாம்களில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பயணம் மேற்கொள்பவர்களுக்கு, அனுமதி சீட்டு வழங்க சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது. அதுவும் சில விதிமுறைகளுக்கு உட்பட்டு வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால், தமிழக அரசு அறிவித்துள்ள இணையதளத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சென்னையில் வீட்டு வேலைக்கு செல்பவர்களுக்கான அனுமதி சீட்டை, அந்த வீட்டின் உரிமையாளரே வந்து வாங்கிக் கொள்ளலாம். அரசு அனுமதி அளித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் தனித்தனி கடைகளுக்கும், மாநகராட்சியில் அனுமதி அட்டை வாங்கிக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். – Source: Maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!