கொரோனாவால் இறந்த நரம்பியல் நிபுணர்… அடக்கம் செய்ய விடாமல் தாக்கிய மக்கள்..!


நேற்று கொரோனா காரணமாக பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதி மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பெரிய பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டார்.

தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். அப்போலோவில் தீவிரமாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார்.

அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு இவரின் உடலை மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றுள்ளனர். நேற்று இரவு இவரின் உடலை தகனம் செய்ய கீழ்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்றனர். மாநகராட்சி அனுமதியுடன் கீழ்பாக்கம் பகுதியில் உடலை தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்து மக்கள் வேகமாக கீழ்ப்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்த கீழ்பாக்கம் பொதுமக்கள் இவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மிக மோசமாக தாக்கி உடைத்து உள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவரின் உடலோடு வேகமாக அங்கிருந்து தப்பித்து சென்றனர். மருத்துவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் ஆம்புலன்சில் இருந்துள்ளனர். அவர்களும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்துள்ளனர்.

அதன்பின் அங்கிருந்து உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை விட்டுவிட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்க கூறியுள்ளனர். அங்கிருந்து ஒரு மருத்துவர் இரண்டு உதவியாளர் மட்டும் அந்த மருத்துவரின் உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் எடுத்துக் கொண்டு வேளங்காடு மயானத்துக்கு எடுத்து சென்றனர்.

பின் வேளங்காடு மயானத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல், மருத்துவர் உடலை புதைத்து உள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து விளக்கிய பலியான மருத்துவரின் நண்பர் மருத்துவர் பாக்கியராஜ் முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவில் , என்னுடைய நண்பர் கொரோனா காரணமாக பலியானார். அப்போலோ கிரீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானார்.

அவரின் உடலை அனுமதியோடு அடக்கம் செய்ய சென்றோம். ஆனால் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எங்குமே அவரின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. இதை நான் கண்ணீரோடு சொல்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். ஆனால் அவருக்கு மக்கள் மரியாதை செய்யவில்லை. மக்களுக்கு உதவி செய்ய பணியாற்றிய மருத்துவருக்கு இதுதான் நிலை. அடியாட்கள் போல வந்து கல்லையும், கட்டையும் வைத்து மிக கொடூரமாக தாக்கினார்கள். மருத்துவரின் உடலை போட்டுவிட்டு ஓடிவந்தோம்.

அந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது. கடைசியில் வேறு இரண்டு மருத்துவர்கள் அவரின் உடலை மீட்டு வந்து அடக்கம் செய்தனர். இதுதான் மருத்துவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா? இதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் நன்றிக்கடனா? அவரின் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லுங்கள்?.. எங்களை எல்லாம் கல்லை வைத்து ஏன் அடிக்கிறீர்கள்.. இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது என்று டாக்டர் பாக்யராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!