தென் ஆப்பிரிக்காவில் லாரி மீது ரெயில் மோதி கோர விபத்து – 18 பேர் மரணம்..!


தென் ஆப்பிரிக்காவின் போர்ட் எலிசபெத் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க் நகருக்கு பயணிகள் ரெயில் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலில் 429 பயணிகள் பயணித்தனர்.

இந்த ரெயில், ஹென்னென்மன்-குருன்ஸ்டாட் நகரங்களுக்கு இடையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு உள்ள ஆளில்லா லெவல் கிராசிங்கை ஒரு லாரி கடந்து செல்ல முயன்றது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக, அதிவேகத்தில் வந்துகொண்டிருந்த ரெயில் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ரெயிலின் 12 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி தடம்புரண்டன. அவற்றில் சில பெட்டிகளில் தீப்பிடித்தன. தடம் புரண்ட ரெயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகள் மரண ஓலமிட்டனர். மற்ற ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். இதற்கிடையே மீட்பு குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. அனைவரும் இணைந்து தீவிர மீட்புபணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 18 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. லாரி டிரைவர் உள்பட 254 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அந்நாட்டின் ரெயில்வே மந்திரி ஜோ மஸ்வாங்கனாயி விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம், இந்த கோரவிபத்துக்கு லாரி டிரைவர் தான் காரணமாக இருக்கக்கூடும் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்தார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!