காக்கி பேண்ட் சட்டையுடன் அரசு பஸ்சை 36 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.


தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான இ.எம்.ஆர்.ராஜா நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திடீரென அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்தார். அங்கு ஏராளமான பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

வழக்கமாக வெள்ளை வேட்டி சட்டையுடன் வரும் அவர் காக்கி பேண்ட், வெள்ளை சட்டையுடன் வந்திருந்தார். அவர் நேராக கிளை மேலாளர் அறைக்கு சென்று அவரிடம் ‘பொது மக்களுக்காக நான் பஸ் ஓட்டப்போகிறேன்’ என்று கூறினார். தன்னிடம் இருந்த கனரக வாகன ஓட்டுனர் உரிமத்தை கிளைமேலாளரிடம் எம்.எல்.ஏ. காண்பித்து ஒப்புதல் பெற்றார்.

அதைத்தொடர்ந்து அங்கு நின்ற பவானி செல்லும் பஸ்சின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து சிரமமின்றி பஸ்சை இயக்கினார். பஸ் நிலையத்துக்கு பஸ்சை அவர் ஓட்டி சென்றதும், அங்கு பவானிக்கு செல்ல காத்திருந்த பயணிகள் அந்த பஸ்சில் திபுதிபு என ஏறினார்கள். பஸ் கண்டக்டராக சரவணன் இருந்தார்.


எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கிய தகவல் அறிந்து பயணிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த பஸ்சில் 40 பேர் பயணம் செய்தனர். பல இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பவானி சென்றார். அங்கிருந்து 28 பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் அந்தியூர் வந்தார். மொத்தம் அவர் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்சை ஓட்டினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பஸ்சை இயக்கிய தகவல் அந்த பகுதியில் பரவியது.

அந்தியூர் பஸ் நிலையத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. ஓட்டிய பஸ் வந்ததும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொழிற்சங்கத்தினர் திரண்டு வந்து மறியல் செய்தனர். போலீசாரின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்றார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை தி.மு.க.வினர் கைவிட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!