பிரசவ வலியில் துடித்த மகளுக்கு தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி செயல்..!


கேரளாவில் கொரோனா வைரஸ், சுய ஊரடங்கு காரணமாக ஆஸ்பத்திரி செல்லும் வழியிலே பிரசவ வலியில் துடித்த மகளுக்கு தந்தையே பிரசவம் பார்த்தார். தற்போது பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரள மாநிலமே முடங்கியுள்ள நிலையில் நேற்று பிரதமர் சுய ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து கேரளா முழுவதும் வெறிச்சோடியது.

இந்நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் முதலமடை சுள்ளியார் டேம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் தேவி (வயது 27). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பரிசோதனை செய்த பாலக்காடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் மார்ச் 29-ந்தேதி குழந்தை பிறக்கும் என்றார்.

இந்நிலையில் நேற்று தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அதிர்ச்சியடைந்த தந்தை, மகளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றார். ஆனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. ஒரு வழியாக ஆம்புலன்சை வரவழைத்த தந்தை, மகளுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார்.

நடுவழியிலேயே பிரசவ வலியில் துடித்தார். இதனையடுத்து அங்கிருந்த தண்ணீர் டேங் அருகே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. தந்தையே மகளுக்கு பிரசவம் பார்த்தார். குழந்தை பிறந்ததும் தொப்புள் கொடியை துண்டிக்காமல் அப்படியே தாயின் மார்பில் குழந்தையை அணைத்தவாறு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

கேரளாவில் கொரோனா வைரஸ் மற்றும் சுய ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் மகளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக வாகனம் கிடைக்காததால் மகளுக்கு நடுவழியிலேயே பிரசவம் ஆனது என்று அவரது தந்தை கூறினார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!