ஐ.எஸ்.பயங்கரவாத கருப்பு பட்டியலில் அமீர் முகமது – அமெரிக்கா அதிரடி


பயங்கரவாத கருப்பு பட்டியலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அமீர் முகமதுவை சேர்த்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈராக் உள்ளிட்ட பல நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்த அமைப்பின் தலைவராக இருந்து வந்தவர் அபு பக்கீர் பாக்தாதி. இவர் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க படைகளின் அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவரைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவர் பதவியில் அபு இப்ராகிம் அல் ஹா‌‌ஷ்மி அல் குரை‌ஷி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியது.

ஆனால் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் என அமீர் முகமது அப்துல் ரகுமான் அல் மாவ்லியைத்தான் அமெரிக்கா கூறுகிறது.

இவரை பயங்கரவாத கருப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக திகழ்ந்த அபு பக்கீர் அல் பாக்தாதி கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க கமாண்டோக்களின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதன்பிறகு அந்த அமைப்புக்கு தலைமை பொறுப்பேற்ற அமீர் முகமது அப்துல் ரகுமான் அல் மாவ்லி, பயங்கரவாத கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் முன்பு ஈராக் நாட்டில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டவர் ஆவார். யாஜிதி சிறுபான்மை மக்களை சித்ரவதை செய்து அதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர்.

நாங்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழித்து விட்டோம். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக யாரை நியமித்தாலும் சரி, அவர்களை தோற்கடிப்பதில் மிகவும் உறுதியாக உள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் மற்றும் நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி கொடூர தாக்குதல்கள் நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்த நிலையில், அமீர் முகமது அப்துல் ரகுமான் அல் மாவ்லி சர்வதேச பயங்கரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டார். அவரை பிடிப்பதற்கு நம்பகமான தகவலை அளிப்பவருக்கு 5 மில்லியன் டாலர் (சுமார் ரூ.37 கோடி) ரொக்கப்பரிசு அளிக்கப்படும் என்றும் அமெரிக்கா அறிவித்தது. இவர் ‌‌ஷரியத் சட்ட (மத சட்டம்) வல்லுனர் என தகவல்கள் கூறுகின்றன.

இவர் ஈராக்கை சேர்ந்த துருக்கியரின் குடும்பத்தை சேர்ந்தவர், இவர் தற்போது எங்கு உள்ளார் என்பதை அமெரிக்க உளவு அமைப்பினால் உறுதி செய்ய முடியவில்லை; இருப்பினும் இவர் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில்தான் இருப்பார் என்று நம்புகின்றனர்.

சதாம் உசேன் காலத்தில் ஈராக் ராணுவத்தில் பணியாற்றியவர் எனவும் தகவல்கள் கூறுகின்றன.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!