கொரோனா பாதிப்பு 206 ஆக உயர்வு; இந்தியாவில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்து உள்ளது. பலி 5 ஆக உயர்ந்து உள்ளது

இந்தியாவில் கொரோனா வேகமாக பரவிவருகிறது. மத்திய அரசின் தகவல்களின்படி தற்போது வரை206 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 32 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உத்தரப்பிரதேசம் லக்னோவில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.லக்னோவில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதால் உ.பி-யில் பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து உள்ளது.

தேசிய பேரிடராக கொரோனா பாதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் என்று பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று உயிரிழந்தார்.

இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதனால் கொரோனாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும், ஈரானில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவர் குணமாகி வீட்டுக்குச் சென்றுள்ளார். டெல்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நேற்று, பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று அயர்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த 21 வயது இளைஞருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதியில் இருந்து 3481 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளதாக தேதி வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!