பொதுமக்களை ஏமாற்றி கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் விற்ற வெளிமாநில வாலிபர்..!


திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலையில் கொரோனா தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றிய வெளி மாநில வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும், சுகாதார முறைகளையும் பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி வதந்தி பரப்பினாலோ, தவறான தகவல்களை பதிவு செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலையில் கொரோனா தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் பொது மக்களை ஏமாற்றிய வெளி மாநில வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார்.

அந்த வெளிமாநில வாலிபர் அந்த பகுதியில் ஏற்கனவே ஜூஸ் கடை நடத்திவந்தார். தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் பீதி ஏற்பட்டு உள்ளதால் இதை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தனது ஜூஸ் கடையின் முன்பு ஒரு அறிவிப்பு பலகையை வைத்தார். அதில் கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் ரூ.150 என்று எழுதினார். இதை பார்த்ததும் ஏராளமான பொதுமக்கள் அந்த கடையின் முன்பு திரண்டனர். போட்டி போட்டுக்கொண்டு அந்த ஜூசை வாங்கிக் குடித்துவிட்டுச் சென்றனர்.

இதைப்பார்த்த சிலர் இதுபற்றிய தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், அந்த பகுதி போலீசாருக்கும் தெரிவித்தனர். போலீசாரும், அதிகாரிகளும் அந்த கடைக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

அந்த கடைக்காரரை பிடித்து அவர்கள் விசாரித்த போது இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் ஆகியவற்றை கலந்து ஜூஸ் தயார் செய்து அதை கொரோனா வைரஸ் தடுப்பு ஜூஸ் என்ற பெயரில் அவர் விற்றது தெரியவந்தது. பொதுமக்களை ஏமாற்றியதற்காக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரை விசாரித்த பிறகு போலீசார் எச்சரித்து அவரை விடுவித்தனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!