மதபோதகர் கொலையில் சிக்கிய வாலிபர்…!


ஆவடி அடுத்த பட்டாபிராமில் மதபோதகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம் சத்திரம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஈனோஸ் (வயது 62).

இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசு (சி.வி.ஆர்.டி.இ) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஹெலன். இவர்களது மகன்கள் கிப்ட்சன் அமெரிக்காவிலும் காட்வின் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஈனோஸ் மற்றும் அவரது மனைவி ஹெலன் ஆகியோர் பட்டாபிராமில் தனியாக வசித்து வந்தனர்.

ஈனோஸ் பட்டாபிராம் வள்ளலார் நகரில் உள்ள சி.பி.எம். பெந்தேகோஸ்தே தேவாலயத்துக்கு தினமும் சென்று அங்கு வரும் மக்களுக்கு ஜெபிப்பது மற்றும் தேவாலயத்தை கவனித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று மாலை ஈனோஸ் தேவாலயத்தில் இருந்தார். அப்போது அங்கு வந்த பட்டாபிராம், அம்பேத்கர் நகர், பாரதிதாசன் தெருவை சேர்ந்த மோசஸ் என்பவர் ஈனோசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென மோசஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஈனோசை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஈனோஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இரும்புலியூரில் நடைபெற்ற ஒரு ஜெபக்கூட்டத்தில் இருந்த மோசசை போலீசார் கைது செய்தனர்.

மோசஸ் அடிதடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். ஆந்திர மாநில போலீசாரால் ஒரு கொலை வழக்கில் கைதான அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்தார்.

நேற்று மாலை தேவாலயத்துக்கு வந்து மோசஸ் ஜெபம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஈனோஸ் மோசசிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.

ஜெயிலுக்கு சென்று வந்தது குறித்து மோசசிடம் ஈனோஸ் கூறியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த மோசஸ் கத்தியால் மத போதகர் ஈனோசை கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் தப்பிச்சென்ற மோசஸ் இரும்புலியூரில் நடைபெற்ற ஜெபக்கூட்டத்துக்கு சென்று அங்கிருந்த போதகர் ஒருவரிடம் கொலை செய்தது குறித்து தெரிவித்துள்ளார்.

அந்த போதகர் கொடுத்த தகவலின்படி கொலையாளி மோசசை போலீசார் கைது செய்துள்ளனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!