வங்கி ஊழியர் குத்திக்கொலை- மனைவியின் கள்ளக்காதலன் வெறிச்செயல்..!


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வங்கி ஊழியர் குத்திக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் ஆணைக்குழாய் மேலத்தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவரது மனைவி காளீஸ்வரி. இவர்களது மகன் மணிகண்டன் (வயது 28).

தனியார் வங்கியில் கடன் முகவராக வேலை பார்த்து வந்த இவருக்கும், மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள கப்பலூர் காந்தி நகரை சேர்ந்த சிவக்குமார்-சித்ரா தேவியின் மகள் ஜோதிலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமியின் தந்தை சிவக்குமார் விபத்தில் சிக்கி கப்பலூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தையை கவனித்து கொள்வதற்காக ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் தாய் வீட்டுக்கு வந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று தந்தைக்கு உதவியாக இருந்தார். அப்போது ஜோதிலட்சுமிக்கும், அருகில் உள்ள செல்வலட்சுமி நகரில் வசிக்கும் கார்த்திக் (24) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு தனியாக சென்று வந்துள்ளனர். மேலும் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் ஜோதிலட்சுமி வீட்டுக்கும் கார்த்திக் அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனிடையே ஜோதிலட்சுமியின் தந்தை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் விருதுநகரில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்று விட்டார்.

அப்போதும் கார்த்திக்கும், ஜோதிலட்சுமியும் போனில் பேசி வந்துள்ளனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவர் மணிகண்டனுக்கு தெரிய வரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட ஜோதிலட்சுமி கோபித்துக் கொண்டு தனது குழந்தையுடன் கப்பலூரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதையறிந்த கார்த்திக், ஜோதிலட்சுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் ஜோதிலட்சுமியை 2-வதாக தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளார்.

ஆனால் அவரது பெற்றோர், ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவளுக்கு கணவர் மற்றும் குழந்தை உள்ளனர். எனவே திருமணம் செய்து வைக்க முடியாது என மறுத்து விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு கோபத்துடன் வெளியேறினார்.

இந்த நிலையில் நேற்று காலை மணிகண்டன் வழக்கம் போல வேலைக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக் குடும்ப பிரச்சனை குறித்து சமரசம் பேச ஜோதிலட்சுமியின் பெற்றோர் அழைப்பதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய மணிகண்டன், கார்த்திக்குடன் சென்றுள்ளார். அதன்பின் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மணிகண்டனின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர்.

நேற்று கப்பலூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு ஜோதிலட்சுமியின் தாயார் சித்ராதேவி சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திக், உனது மருமகனை கொலை செய்து விட்டேன். இப்போது உன் மகளை எனக்கு திருமணம் செய்து கொடு என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சித்ராதேவி உடனே மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

பதறிப்போன அவர்கள் நேற்று இரவு கப்பலூர் வந்தனர். ஆஸ்டின்பட்டி போலீசில் இது தொடர்பாக அவர்கள் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் நேற்று இரவு போலீசார் மணிகண்டனை தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

அப்போது ஜோதிலட்சுமியின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தனியார் தோப்பில் மணிகண்டன் கழுத்து உள்பட 7 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக மணிகண்டனின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியின் கள்ளக்காதலன் கார்த்திக் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிலரை தேடி வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஜோதிலட்சுமி மற்றும் அவரது தாய் சித்ரா தேவியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!