இப்படியும் இரக்கமில்லாத மனிதர்களா..? ஓடும் பஸ்சில் கர்ப்பிணிக்கு நிகழ்ந்த கொடூரம்..!


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஈராற்றுபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தாஷிதா (வயது 34). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையின்போது ஊருக்கு வந்து மனைவி, குழந்தைகளை பார்த்து செல்வார்.

இந்த நிலையில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த தாஷிதா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருவது வழக்கம்.

நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு கேரள அரசு பஸ் மூலம் தாஷிதா வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கர்ப்பிணியான தாஷிதாவுக்கு யாரும் இருக்கையும் கொடுக்கவில்லை.

இதனால் பஸ்சின் படிக்கட்டு பகுதியில் தாஷிதா நின்று கொண்டு பயணம் செய்தார். அந்த பகுதியில் ஒரு வளைவில் பஸ் வேகமாக திரும்பியபோது நிலை தடுமாறிய தாஷிதா பஸ்சில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.


இதில் படுகாயம் அடைந்து அவர், உயிருக்கு போராடினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு நேற்று காலை ஆபரேசன் மூலம் தாஷிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தாஷிதா மாலையில் பரிதாபமாக இறந்து போனார்.

இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தாஷிதா பயணம் செய்த பஸ்சின் டிரைவர் கவனக்குறைவாக செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அரசு பஸ்சில் கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கை இருக்கும்போது, அந்த பெண் அமர்வதற்கு வசதி செய்து கொடுக்காத கண்டக்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!