மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேரை கொன்ற பெண் சிறையில் தற்கொலை முயற்சி..!


கேரளாவில் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கணவர் உள்பட 6 பேரை கொன்ற ஜோளி, சிறையில் தற்கொலைக்கு முயன்றதையடுத்து ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி.

ராய் தாமஸ் கடந்த 2011-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தார். இதுபற்றி அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், குடும்பச் சொத்தை அபகரிக்கவும், உறவினர் ஒருவரை திருமணம் செய்யவும் ராய்தாமசின் மனைவி ஜோளியே கணவரை கொலை செய்தது தெரிய வந்தது.

ஜோளியை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, அவரது மாமனார், மாமியார் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 6 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இக்கொலைகள் வெளியே தெரியாமல் இருக்க மட்டன் சூப்பில் சயனைடு கலந்து ஜோளியே அவர்களை கொன்றதும் தெரிய வந்தது.

இதையடுத்து கோழிக்கோடு போலீசார் ஜோளிக்கு சயனைடு வாங்கி கொடுத்த பிரஜிகுமார், மேத்யூ ஆகியோரையும் கைது செய்தனர்.

ஜோளி, மீதான வழக்கு கோழிக்கோடு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜெயிலுக்குள் இருந்த ஜோளி, இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெயில் அறைக்குள் திடீரென கை மணிக்கட்டை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அதிக ரத்தம் வெளியேறியதால் ஜோளி மயங்கி விழுந்தார்.

இதனை கண்ட ஜெயில் ஊழியர்கள் அவரை மீட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஜோளியிடம் போலீசார் தற்கொலைக்கு முயன்றது பற்றி விசாரித்தனர். அதற்கு அவர், கையை பல்லால் கடித்து கிழித்ததாகவும், பின்னர் காயத்தை அதிகப்படுத்த, கிழித்த கையை தரையில் தேய்த்ததாகவும் கூறினார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், ஜோளி கூறியதை நம்பவில்லை. அவர்கள் பிளேடு போன்ற கூர்மையான ஆயுதத்தால் கையை கிழித்து காயம் ஏற்படுத்தி இருக்க வேண்டும் என்றனர்.

கோழிக்கோடு மாவட்ட ஜெயிலில் ஜோளி அடைக்கப்பட்ட அறையில் ஜெயில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு பிளேடு போன்ற ஆயுதங்கள் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.

கொலை வழக்கில் ஜோளி கைதான நாள் முதலே தற்கொலை செய்ய வேண்டும் என்று புலம்பிக் கொண்டிருந்ததாகவும், அவருக்கு ஜெயிலில் கவுன்சிலிங் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். அதன் பிறகும் ஜோளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!