கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை ஈரானில் 19 ஆக உயர்வு


ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 139 பேருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 30-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானிலும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டின் ஆன்மீக தளங்கள் அதிகமுள்ள குவாம் நகரில் முதலில் பரவத்தொடங்கிய கொரோனா தற்போது நாட்டின் தெஹ்ரான், ஹிலன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் பரவி வருகிறது.

இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 139 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!