ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய 4-வது பணக்காரர்..!


உலகின் 4-வது பணக்காரர் வாரன் பப்பெட் தற்போது முதன் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

உலகை உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் ஸ்மார்ட்போன் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். மிக குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு திரும்பிவிட்டனர். தினக்கூலி வாங்கும் நபர் கூட ஸ்மார்ட்போனை வாங்கும் சூழல் உள்ளது.

ஆனால் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் 4-வது இடத்தில் இருக்கும் நபர் இதுவரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தியதே இல்லை என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?

ஆம், அது உண்மைதான். அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரும் பெர்க்சைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான வாரன் பப்பெட் தனது வாழ்நாளில் இதுவரை ஸ்மார்ட்போனை பயன்படுத்தியதே இல்லை.ஆடம்பரமான மற்றும் உயர்பாதுகாப்புடைய செல்போன்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஆப்பிள் நிறுவனத்தில் வாரன் பப்பெட் பங்குதாரராக இருந்தபோதிலும் சாம்சங் நிறுவனத்தின் பழைய ‘பிளிப்’ மாடல் செல்போனையே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் வாரன் பப்பெட் தற்போது முதன் முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கியுள்ளார். தனது பழைய ‘பிளிப்’ மாடல் செல்போன் நிரந்தரமாக போய்விட்டதாகவும், தற்போது ஆப்பிள் ஐ போன் 11 மாடலை பயன்படுத்தி வருவதாகவும் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது வாரன் பப்பெட் தெரிவித்தார்.

அதே சமயம் அழைப்புகளை கையாள மட்டுமே ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதாகவும் பங்கு சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ள தனியாக ‘ஐபேட்’ ஒன்றை பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!