47 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த சகோதரிகள் – கம்போடியாவில் நெகிழ்ச்சி..!


கம்போடியாவில் 1970களில் ‘க்மெய்ர் ரூஷ்’ சர்வாதிகார ஆட்சியின்போது இறந்துவிட்டதாக நினைத்து வாழ்ந்து வந்த இரு சகோதரிகள் 47 ஆண்டுகளுக்கு பின் தற்போது இணைந்துள்ளனர். ‘க்மெய்ர் ரூஷ்’ என்பது போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு வழங்கப்படும் பெயராகும்.

இதில் ஒருவருக்கு (பன் சென்) 98 வயதும் மற்றொருவருக்கு (பன் சியா) 101 வயதும் ஆகிறது.

அதே போல 98 வயதாகும் மூதாட்டி பன் சென், இறந்துவிட்டதாக நினைத்திருந்த 92 வயதாகும் தனது இளைய சகோதரருடனும் ஒன்று சேர்ந்துள்ளார்.

1979இல் தனது கணவரை இழந்தபின், கம்போடிய தலைநகரில் குப்பைகளை சேகரித்து வாழ்ந்து வந்த பன் சென் கம்போடியா சில்ட்ரன்ஸ் ஃபண்ட் எனும் தொண்டு நிறுவனம் மூலம் அவரது சொந்த கிராமத்தில் உள்ள அந்த மூதாட்டியின் சகோதரர் மற்றும் சகோதரி ஆகியோருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.

கம்போடியாவில் போல் பாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1973ல் இரு சகோதரிகளும் கடைசியாக பார்த்துக் கொண்டனர். பிறகு இப்போதுதான் சந்தித்துக் கொள்கிறார்கள்.

க்மெய்ர் ரூஷ் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின்போது சுமார் 20 லட்சம் மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டது.

1975 முதல் 1979 வரையிலான ‘க்மெய்ர் ரூஷ்’ ஆட்சியில் குடும்பங்கள் பிரிக்கப்பட்டு மக்கள் நகரங்களிலும், வேளாண் பண்ணைகளிலும் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டனர்.

குடும்பத்தை பிரிந்த சில ஆண்டுகளில், தனது கணவரை இழந்த பன் சென், கம்போடிய தலைநகரமான ப்னோம் பென்னில் உள்ள பெரும் குப்பை கழிவுகளுக்கு அருகே உள்ள ஒரு சிறு பகுதிக்கு இடம்பெயர்ந்தார்.

குப்பைகள் பொறுக்குவது, கிடைக்கும் பிளாஸ்டிக்கை விற்பது, அப்பகுதியில் இருக்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்வது என தன் வாழ்க்கையை கழித்தார் பென் சென்.

தலைநகரத்தில் இருந்து 90 மைல்கள் தொலைவில் இருக்கும் தனது சொந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் என்று நீண்ட காலமாக நினைத்து வந்தார். ஆனால், முதுமை, நடக்க முடியாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர் அங்கு செல்ல நீண்ட காலம் ஆனது.-Source: bbctamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!