தண்ணீர் தொட்டியில் 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியர் பகீர் தகவல்..!


அஞ்சுகிராமம் அருகே 3½ வயது மகளை கொன்ற பேரூராட்சி ஊழியரை போலீசார் கைது செய்தனர். கடன் தொல்லையால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய நினைத்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி மார்த்தாண்டபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). இவர் மயிலாடி பேரூராட்சியில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராமலட்சுமி (34). இவர்களுக்கு ஷியாம் சுந்தர் (7), சஞ்சனா (3½) என்ற 2 குழந்தைகள். இதில் ஷியாம்சுந்தர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். சஞ்சனா மயிலாடியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள்.

கடந்த 12-ந் தேதி, அடகு வைத்திருந்த நகைகளை மீட்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், சிறுவன் ஷியாம் சுந்தரை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றார். அத்துடன் 3½ வயது குழந்தை சஞ்சனாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார். இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவான செந்தில்குமாரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி செந்தில்குமாரை தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில், கோவை மாவட்டம் கீழமேடு ரெயில்நிலையம் அருகே பதுங்கியிருந்த செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரை அஞ்சுகிராமம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் ஊரில் சீட்டு நடத்தியதில் எனக்கு பல லட்சம் ரூபாய் கடன் ஏற்பட்டது. கடன் அடைப்பதற்காக மனைவியின் நகைகளை அடகு வைத்தேன். சம்பவத்தன்று திருநெல்வேலிக்கு உறவினரின் திருமணத்துக்கு செல்வதாக நகையை திரும்ப மீட்டு தருமாறு மனைவி கேட்டார். இதையடுத்து நகையை மீட்பதற்காக பலரிடம் கடன் கேட்டேன். ஆனால், பணம் கிடைக்கவில்லை. இதனால் எனக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தற்கொலை முடிவு

ஏற்கனவே எனக்கு கடன் தொல்லை இருந்ததால் தற்கொலை செய்ய முடிவு செய்தேன். நான் தற்கொலை செய்தால் குழந்தைகள் அனாதையாகி விடுவார்கள் என நினைத்து அவர்களை கொன்றுவிட்டு தற்கொலை செய்ய நினைத்தேன்.

இதற்காக முதலில் எனது பெற்றோர் வசித்து வரும் குடும்ப வீட்டுக்கு சென்றேன். அங்கு விளையாடி கொண்டிருந்த எனது மகன் ஷியாம் சுந்தரை அழைத்தேன். நான் அழைத்தவுடன் பாசத்துடன் ஓடி வந்த மகனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினேன். சிறிது நேரத்தில் அவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து அவன் இறந்து விட்டதாக கருதிவிட்டு வெளியேறினேன். தொடர்ந்து மகளையும், மனைவியையும் கொலை செய்வதற்காக நான் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றேன்.

அங்கு எனது மகள் சஞ்சனா மட்டும் தனியாக இருந்தாள். அவளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தேன்.

காரில் தப்பி சென்றேன்

இதற்கிடையே, கழுத்து இறுக்கப்பட்ட மகனை மனைவியும், உறவினர்களும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றதாக அறிந்தேன். இதையடுத்து வாடகை காரில் திருநெல்வேலிக்கு தப்பி சென்றேன். அங்கிருந்து மதுரை சென்று பின்னர், கோவையில் ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்கு அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால் கீழமேடு ரெயில் நிலையம் பகுதியில் ஒரு பாலத்தில் அடியில் பதுங்கி இருந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்தனர்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அஞ்சுகிராமம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!