சுகப்பிரசவமாக குழந்தையை பெற்றெடுக்க பெண்கள் செய்ய வேண்டியவை


ஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட்டாலும், சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது.

இன்று பல பிரசவ முறைகள் இருந்தாலும், சுகப்பிரசவம் போல சிறந்த பிரசவ முறை எதுவும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை யாராலும் மறுக்கவும் முடியாது. ஒரு சில பிரசவ முறைகள் சில தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்தப்பட்டாலும், சுகப்பிரசவம் என்பது அம்மா மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்தை உறுதி செய்கின்றது. கர்ப்பிணி பெண்கள் சுக பிரசவத்தின் நன்மைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதற்கு முயற்சி செய்ய தொடங்க வேண்டும்.

எடுத்ததற்கெல்லாம் மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிருங்கள். முடிந்த வரை பெரியோர்களின் ஆலோசனைப் படி, கர்ப்ப காலத்தில் ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் வீட்டு வைத்தியத்தைச் செய்ய முயற்சி செய்து சரி செய்யுங்கள். அது நிச்சயம் உங்களுக்குப் பலன் தரும். ஆனால் அதை தவிர்த்து நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று தேவை இல்லாமல் அதிகம் மாத்திரைகள் சாப்பிட்டால் அது உங்கள் உடலை மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் உடல் நலத்தையும் பாதிக்கும். மேலும் இது சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பையும் குறைத்து விடும்.

நீங்கள் சுக பிரசவம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட்டால் அதில் உறுதியான மனதோடு இருங்கள். இந்த தீர்மானமே, உங்களுக்கான சரியான வழியை வகுத்துக் கொடுத்து விடும். மேலும் அப்படி மனதளவில் நீங்கள் உறுதியாக இருக்கும் போது, உங்கள் உடலும், ஆன்மாவும் அதனையும் நாளடைவில் விரும்பத் தொடங்கும். இறுதியில், நீங்கள் எதிர்பார்த்த சுக பிரசவமும் நடக்கும்.

இன்றைய நவீன மருத்துவ வளர்ச்சியில் சுக பிரசவம் ஏற்படும் வாய்ப்பு முழுமையாக இருந்தாலும், ஒரு சில அறியாமையாலும்,சில காரணத்தினாலும், அறுவை சிகிச்சை பிரசவம் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் சுக பிரசவம் நடக்க மிக அவசியம். பல இளம் பெண்கள், சரியான புரிதல் இல்லாததாலும், பிரசவ நேரத்தில் வலி ஏற்படும் என்கின்ற பயத்தாலும் அறுவை சிகிச்சை பிரசவத்தைத் தேர்வு செய்கின்றனர்.

சுக பிரசவம் ஏற்பட நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாகச் சொல்லப் போனால், இரும்புச் சத்து, கால்சியம், புரதம், நார்ச்சத்து, மக்னீசியம், மங்கனீஸ், ஜின்க் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை நீங்கள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வைட்டமின் ஏ, சி, பி, பி12 போன்ற சத்துக்களும் உங்கள் உணவில் நிறைவான அளவு இருக்க வேண்டும்.

இவற்றை நீங்கள் சத்து மாத்திரை சாப்பிட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. இயற்கையாக விளையும் காய், பழம் மற்றும் கீரை வகைகளைச் சரியான முறையில் சமைத்து, அதிலிருந்து சத்துக்களைப் பெற்று கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே, சுகப்பிரசவத்திற்கு ஏற்ற உணவாக அவை இருக்கும்.

நிறைய கர்ப்பிணி பெண்கள் பிரசவத்தைப் பற்றிய தேவையில்லா பயமே அறுவை சிகிச்சை பிரசவத்திற்கான காரணியாக அமைந்து விடுகிறது. ஆகப் பிரசவத்தைக் குறித்த பயத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது அவசியம். நல்ல இசையைக் கேட்டு உங்கள் மனதை எப்போதும் புத்துணர்ச்சியோடும், மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.

சுகப்பிரசவம் ஏற்படாமல் போவதற்கு உடல் உழைப்பு இன்மையும் ஒரு முக்கிய காரணமாகும். நீங்கள் எவ்வளவு உடலுக்கு வேலை கொடுக்கின்றீர்களோ அவ்வளவு உங்களுக்கு சுகப்பிரசவம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கும். அதனால், முடிந்த வரை போதுமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், உங்களால் உடற்பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்க முடியவில்லை என்றாலும், உங்கள் வீட்டு வேலைகளை முடிந்த வரை நீங்களே செய்து விட முயற்சி செய்ய வேண்டும். இதனால் சுகப்பிரசவம் ஏற்படச் சாத்தியங்கள் அதிகரிக்கும்.

மேலும் தினமும், ஒன்று முதல் இரண்டு மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், உங்கள் உடல் சுகப்பிரசவத்திற்கு தயாராகி விடும். மேலும் பிரசவ நேரத்தில் வலியும் குறைவாக இருக்கும். நடைப்பயிற்சியை ஒழுங்காகக் கடைப்பிடித்த பல கர்ப்பிணி பெண்களுக்குச் சுகப்பிரசவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சில குறிப்பிட்ட ஆசனங்களை மேற்கொள்ளுவதால் கர்ப்பிணி பெண்களின் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் வலுவடையும். நாளடைவில் எலும்புகள் நன்கு நெகிழத் தொடங்கும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது.

கர்ப்பிணி பெண்கள் இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதோடு மட்டும் நில்லாமல், முடிந்த வரை உங்களிடம் எதிர்மறையாகப் பேசுபவர்களிடம் பழக்கம் வைத்துக் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். அவர்களின் பேச்சு உங்கள் நம்பிக்கையை உடைத்து விடக் கூடும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!