இலங்கையின் போர்க்குற்றங்கள் எதிரொலி – ராணுவ தளபதிக்கு அமெரிக்கா தடை


இலங்கையின் ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது.

இலங்கையின் ராணுவ தளபதியாக ‌‌ஷவேந்திர சில்வா கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டி இருந்தது. போரின்போது இவர் இலங்கையின் வடக்கு பிராந்தியத்தில் இயங்கி வந்த ராணுவப்பிரிவு ஒன்றுக்கு தளபதியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ‌‌ஷவேந்திர சில்வா மீதான போர்க்குற்றங்களை முன்வைத்து, அவர் தங்கள் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஐ.நா. மற்றும் பிற அமைப்புகளால் ‌‌ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தீவிரமானவையும், நம்பகமானவையும் ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் காரணமாக, ‌‌ஷவேந்திர சில்வாவை ராணுவ தளபதியாக நியமித்தபோதே சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!