சுலைமாணி கொல்லப்பட்டு 40 -து நாள்… அமெரிக்க படைத்தளம் மீது ஏவுகணை தாக்குதல்


ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே கடந்த மாதம் 3-ம் தேதி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் முக்கிய தளபதி காசிம் சுலைமானி, ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமாண்டர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் நாட்டின் அதிபருக்கு அடுத்த நிலையில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட காசிம் சுலைமானி அமெரிக்க தாக்குதலால் கொல்லப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஈரான் முழுவதும் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றது.

இதையடுத்து, சுலைமானியின் மரணத்திற்கு நிச்சயம் பலி வாங்குவோம் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் மற்றும் அதன் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுவான ஹிஸ்புல்லாவும் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்திவருகிறது.

கடந்த மாதம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 100-க்கும் அதிகமான அமெரிக்க படை வீரர்களுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டது எனவும் அமெரிக்க ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து இன்று திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் குழு நிகழ்த்தியிருக்கலாம் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏவுகணை தாக்குதலில் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமாணி கொல்லப்பட்டு இன்றுடன் 40-வது நாள் நிறைவடைவதையடுத்து அந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்னர்.

ஏவுகணை தாக்குதல்களால் ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!