வானம் கொட்டட்டும் திரைவிமர்சனம்..!


நடிகர் விக்ரம் பிரபு
நடிகை மடோனா செபஸ்டியான்
இயக்குனர் தனசேகரன்
இசை சித் ஸ்ரீராம்
ஓளிப்பதிவு பிரீதா ஜெயராமன்

சரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார்.

அவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விக்ரம் பிரபு, சாதிக்கத்துடிக்கும் இளைஞனாக தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனமான தங்கையாக வந்து கவர்கிறார். அவருக்கு விக்ரம்பிரபுவுக்கும் இடையேயான அண்ணன் – தங்கை பாசம் ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமாரும், ராதிகாவும் தான். நீண்ட நாட்களுக்கு பின் ஜோடியாக நடித்துள்ள இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். சாந்தனு மற்றும் மடோனா செபஸ்டியனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

இரட்டை வேடத்தில் நடித்துள்ள நந்தா, சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் வில்லனாக வந்து பார்வையிலேயே மிரட்டுகிறார். மேலும் பாலாஜி சக்திவேல், மதுசூதனன் ஆகியோர் எதார்த்தமாக நடித்துள்ளனர்.

இயக்குனர் தனசேகரன் அறிமுக படத்திலேயே கதைக்கு ஏற்றபடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும், அதனை கையாண்டுள்ள விதமும் சிறப்பு. சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. மற்றபடி குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார்.

சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ணு தங்கம் பாடல் திரைக்கதைக்கு ஏற்றார் போல் பொருந்திப்போகிறது. அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு கச்சிதம்.

மொத்தத்தில் ‘வானம் கொட்டட்டும்’ பாச மழை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!