கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தை


சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பூரண உடல் நலத்துடன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 361 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் மட்டும் 17,205 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் 21,558 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இதற்கிடையில், சீனாவில் உள்ள ஷூலாங்ஜீயங் மாகாணத்தின் ஹர்பின் நகரில் உள்ள மருத்துவமனையில் 38 வாரங்கள் நிரம்பிய நிறைமாத கர்ப்பிணி கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்த பெண்ணை கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 31) பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர்.

வைரஸ் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தை

இந்நிலையில், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே (வியாழக்கிழமை), தாயின் மூலம் கருவில் இருந்த குழந்தைக்கும் வைரஸ் பரவாமல் இருக்க உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து, அறுவைசிகிச்சை மூலம் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என மருத்துவர்கள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பரிசோதனை செய்தனர்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தாயும் குழந்தையும் தற்போது பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் அவர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!