பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை… காரணம் என்ன..?


சேலம் பெரியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் விவகாரமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள பாப்பிரெட்டிப்பட்டி கோபாலபுரத்தை சேர்ந்தவர் திருமலை. இவர், அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிவேதா (வயது 23).

இவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. (தாவரவியல் ) 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி தினமும் வகுப்பிற்கு சென்று வந்தார்.

நேற்று இரவு மாணவி நிவேதா தங்கியிருந்த 75-வது அறை பகுதியை சில மாணவிகள் கடந்துள்ளனர். அப்போது மின்விசிறியில் துப்பட்டாவை கட்டி கழுத்து இறுகிய நிலையில் நிவேதா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

உடனே விடுதி வார்டனுக்கு மாணவிகள் தகவல் கொடுத்தனர். பின்னர் விடுதி நிர்வாகம் தரப்பில் இருந்து, கருப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, விடுதி மாணவிகள் மற்றும் விடுதி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

பின்னர், போலீசார் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பல்கலைகழகத்திற்கு வந்தனர். மாணவி தற்கொலை செய்த அறைக்கு சென்ற அவர்கள், உடலை பார்த்து கதறி அழுதனர்.

விடுதியில் மாணவி நிவேதாவுடன் 2 மாணவிகள் தங்கி படித்து வந்தனர். அவர்கள், கடந்த 10 நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கான கள ஆய்வுக்கு சென்று விட்டனர். இதனால், நிவேதா மட்டுமே அந்த அறையில் கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, அவரை சக மாணவிகள், பார்த்து பேசியுள்ளனர். அன்றைய தினம் இரவு அறைக்கு சென்ற அவர், நேற்று காலை வெளியே வரவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவே, நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவி தற்கொலை செய்த சம்பவத்தை அறிந்ததும் ஏராளமான மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவு வாயில் பகுதியில் திரண்டு வந்தனர். அவர்கள், மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி நுழைவு வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் மற்றும் பேராசிரியர்கள், பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மாணவி நிவேதா உடல், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

மாணவி நிவேதா தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என தெரியவில்லை. அவரின் அறையில் கைப்பற்றப்பட்ட நோட்டு, புத்தகங்களில் காதல் குறியீடு மற்றும் கவிதைகள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால், காதல் விவகாரத்தில் தற்கொலை செய்திருக்கலாமோ? என சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாணவி நிவேதா படிக்கும் துறையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், மற்றொரு மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார் என்ற பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் அந்த மாணவி புகார் கொடுத்த நிலையில், பிறகு புகார் வேண்டாம் என விலகிக் கொண்டார். தற்போது, அதே துறையில் எம்.எஸ்.சி. படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பதால், விடுதியில் தங்கி இருக்கும் மற்ற மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியர்கள் நடத்தை பற்றி விசாரிக்க வேண்டும் என மாணவிகள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!