ஆப்கானிஸ்தானில் பிறக்கும் குழந்தைகளுக்கு நடக்கும் விநோதம்..!


உள்நாட்டு யுத்தம், தீவிரவாதிகள் உடன் மல்லுக்கட்டு என சிக்கிக்கிடந்த ஆப்கானிஸ்தான் தற்போது சில ஆண்டுகளாகத்தான் நவீன வசதிகளை பெற்று வருகிறது. இதன் காரணமாக, இங்கு பிறந்த குழந்தைகளில் பெரும்பாலோனோர்க்கு பிறப்பு சான்றிதல் இல்லை.

எனினும், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய நாள்காட்டி பின்பற்றப்பட்டு வருகிறது. பிறந்த தேதியை இந்த நாள்காட்டியில் குறித்திருந்தாலும், நவீன ஆங்கில நாள்காட்டிக்கு அந்த நாளை மாற்றி கணக்கிடுவது மிக சிரமமாக உள்ளது. ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய நாள்காட்டியின் படி மார்ச் 21-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் தொடங்குகிறது. இதன் மூலம், பிறந்த ஆண்டு மட்டும் எளிதாக கண்டறிகின்றனர்.

தற்போது, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவது முதல், பாஸ்போர்ட் பெறுவது வரை அனைத்திற்கும் பிறந்த தேதி கட்டாயம் என்பதால், ஆப்கனில் பெரும்பாலோனோரின் தேர்வு ஜனவரி 1 ஆக உள்ளது. அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில், உருவத்திற்கு ஏற்ற வயதுதான் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலை தொடரக்கூடாது என்பதற்காக அனைத்து மருத்துவமனைகளும் குழந்தைகள் பிறந்த உடன் நவீன காலண்டர் தேதியை பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடிமக்களின் அடிப்படை விபரங்களை உள்ளடக்கிய தேசிய அடையாள அட்டையை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஹிஜ்ரியில் இருந்து நவீன நாள்காட்டிக்கு தேதியை மாற்றுவது குழப்பமாக உள்ளதாக கூறும், சமாத் அலாவிக்கு, அவரது மனைவி மற்றும் இரு மகன்களுக்கும் ஜனவரி முதல் தேதிதான் பிறந்த நாளாக உள்ளது.

பேஸ்புக்கில் கணக்கு தொடங்கும் போது பிறந்த தேதி கேட்டது, எளிதாக நியாபகம் வைக்க ஜனவரி முதல் தேதியை தேர்வு செய்தேன் என்று கூறிய சமாத், விரைவில் இந்த நிலை மாறும் என்றும் தெரிவித்துள்ளார்.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!