ரூ.175 கோடி மதிப்புள்ள போதை பொருட்களுடன் 5 பாகிஸ்தானியர்கள் கைது


குஜராத் மாநிலத்தின் கடலோர எல்லை பகுதியில் போதை பொருட்கள் கடத்த முயன்ற பாகிஸ்தானியர்கள் 5 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலையே நீடித்து வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் எல்லைப்பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. நமது ராணுவமும் அவர்களுக்கு தக்க பதிலடி அளித்து வருகிறது. இதற்கிடையே பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களும் இருப்பதால் எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கடலோர எல்லை பகுதியில் போதை பொருட்கள் கடத்த முயன்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 பேரை கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலத்தின் குச் மாவட்டத்தில் உள்ள ஜகாவு கடற்கரை பகுதிகளில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இன்று காலை அப்பகுதியில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் மீன்பிடி படகு ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி பாதுகாப்புப்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஒரு கிலோ அளவிலான, மொத்தம் 35 பாக்கெட்டுகள் ஹெராயின் போதை பொருட்கள் அந்த படகில் இருந்தது சோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து அப்படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஐந்து பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.175 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!