மாலையும் கழுத்துமாக வந்து வாக்களித்த புதுமண தம்பதிகள்..!


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரத்தில் புதுமண தம்பதிகள் மணகோலத்தில் வந்து வாக்களித்தனர்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்தது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மாலை வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில் அதாவது 4.45 மணிக்கு மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வலவு பகுதியை சேர்ந்த ரினோடிக்லுஸ் (வயது 28) அவரது மனைவி நிகிதா (23) ஆகியோர் மாலையும் கழுத்துமாக வேகமாக வந்தனர். பின்னர் மணமகன் ரினோடிக்லுஸ் வாக்கு பதிவு மையத்திற்கு சென்று வாக்கு பதிவினை பதிவு செய்தார்.

பின்னர் ரினோடிக்லுஸ் இதுகுறித்து கூறும்போது,

நான் பெருந்துறையில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். எனது மனைவி நிகிதா திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். எங்கள் திருமணம் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ஒரு ஆலயத்தில் இன்று நடந்தது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் உடனடியாக வாக்கு பதிவு செய்ய முடிவு செய்தேன். இதையடுத்து எனது மனைவியுடன் இங்கு வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினேன். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓட்டு என்பது எனது ஜனநாயக உரிமை. இதை எப்போதும் நான் விட்டுக் கொடுத்ததில்லை என்றார்.

புதுமண தம்பதிகள் மாலை கழுத்துடன் வந்து ஓட்டு போட்டது அப்பகுதியில் நிகழ்ச்சி ஏற்படுத்தியது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!