யுவராஜ் சிங் மட்டும் இல்லை என்றால்… உலகக்கோப்பை கிடைத்திருக்காது – ஹர்பஜன் சிங்


யுவராஜ் சிங்கின் முக்கியமான பங்களிப்பு இல்லை என்றால், இந்தியாவால் இரண்டு உலகக்கோப்பையை வென்றிருக்காது என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா 2007-ல் டி20 உலகக்கோப்பையையும், 2011-ல் 50 ஓவர் உலகக்கோப்பையையும் கைப்பற்றியது. இந்த இரண்டு கோப்பைகளையும் எம்எஸ் டோனி தலைமையில் இந்தியா கைப்பற்றியது. ஹர்பஜன் சிங், யுவராஜ், சேவாக் போன்றோர் இரண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் இல்லை என்றால் இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், ‘‘நாம் உலகக்கோப்பை குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இந்திய கிரிக்கெட் அணி பெருமைப்படும் வகையில் இருக்கிறது என்றால், அதற்கு யுவராஜ் சிங்கின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது.

ரசிகர்கள் அடிக்கடி சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, அனில் கும்ப்ளே, கபில்தேவ் ஆகியோரை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனால், யுவராஜ் சிங் மட்டும் இல்லை என்றால், நமக்கு இரண்டு உலகக்கோப்பை கிடைத்திருக்காது.

யுவராஜ் சிங் இல்லை என்றால் நாம் அரையிறுதி வரை மட்டுமே முன்னேறி இருப்போம். சிறந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். தற்போது கூட நாம் அரையிறுதிக்கு முன்னேறினோம். ஆனால், உலகக்கோப்பையை வெல்ல, யுவராஜ் சிங் போன்ற வீரர்கள் தேவை. நாங்கள் அதிர்ஷ்டமானவர்கள். அவரை போன்ற ஒரு வீரரை பெற்றிருந்தோம்.

2011 உலகக்கோப்பைக்குப் பின் நாம் இரண்டு தொடர்களில் விளையாடியுள்ளோம். நம்மால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அவரை போன்ற ஒரு வீரரை விரைவில் கண்டுபிடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!