450 லாரிகள்.. காஷ்மீரில் 900 தமிழக லாரி ஊழியர்கள் உணவுக்கு தவிப்பு..!


தமிழகத்தில் இருந்து 450 லாரிகளில் ஆப்பிள் லோடு ஏற்ற காஷ்மீர் சென்ற 900 பேர் பனியில் சிக்கி சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாமக்கல் உள்பட பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சரக்கு லாரிகள் ஆப்பிள் பழம் ஏற்றி வருவதற்காக காஷ்மீர் மாநிலத்துக்கு சென்றுள்ளன.

தற்போது கடுமையான பனிப்பொழிவு நிலவுவதால் வாகனங்கள் சாலைகளில் பயணிப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா வாகனங்களையும் இலகு ரக வாகனங்களையும் மட்டுமே ராணுவத்தினர் அனுமதிக்கிறார்கள்.

இதனால் ஆப்பிள் லோடு ஏற்றிக் கொண்டு புறப்பட்ட 450 லாரிகள் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளன.

டெல்லியில் சரக்குகளை இறக்கி விட்டு காஷ்மீருக்கு ஆப்பிள் ஏற்ற கடந்த 7-ந்தேதியே சென்று விட்டதாகவும் 10 நாட்களுக்கும் மேலாக தவித்து கொண்டிருப்பதாகவும் நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமார் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த லாரிகளில் டிரைவர்கள்- கிளீனர்கள் என 900-க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கிறார்கள். அவர்கள் சாப்பாட்டுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!