என்ன ஒரு ஆவேசம்.. அப்பா மாதிரியே.. நாட்டையே பேச வைத்துவிட்டாரே கங்குலி மகள்..!


2002ம் ஆண்டு. லார்ட்ஸ் மைதானம். நாட்வெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமான ஒரு வெற்றியை பதிவு செய்து இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா.

இந்திய கேப்டனாக இருந்த கங்குலி தனது சட்டையை கழற்றி சுற்றி அணியின் வெற்றியை ஆர்ப்பாட்டத்தோடு வரவேற்றார். அப்போது கங்குலியின் அந்த செயல், நாடு முழுக்க பரபரப்பாக எப்படி பேசப்பட்டதோ, அப்படி இன்று, இத்தனை வருடம் கழித்து, தாதா கங்குலியின் மகள் சனா வெளியிட்டதாக கூறப்படும் ஒரு இன்ஸ்ட்டாகிராம் ஆவேச பதிவு பேசப்படுகிறது.

நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மாணவர்கள், மாணவிகள் போராட்ட களம் வந்துள்ள நிலையில், இந்த 18 வயது இளம் பெண்ணின் பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

குஷ்வந்த் சிங் எழுதிய, “The End of India” என்ற புத்தகத்திலுள்ள வரிகளை மேற்கோள்காட்டியுள்ளார் சனா. யதேர்ச்சையாக, இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு 2003ம் ஆண்டு. கங்குலி ஆக்ரோஷமான அடுத்த வருடத்தில்தான் இந்த புத்தகம் வெளியானது. அதில் சனா மேற்கோளிட்ட வரிகள் “ஒவ்வொரு பாசிச ஆட்சிக்கும் செழித்து வளர சமூகங்கள் மற்றும் குழுக்கள் தேவை. இது ஒரு குழு அல்லது இரண்டிலிருந்து தொடங்குகிறது. ஆனால் அது ஒருபோதும் முடிவதில்லை. வெறுப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கம் தொடர்ந்து பயத்தையும் சண்டையையும் உருவாக்குவதன் மூலம் மட்டுமே தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.


இன்று நாம் முஸ்லீம்கள் அல்ல, கிறிஸ்தவர்கள் அல்ல என்பதால் பாதுகாப்பாகதானே இருக்கிறோம் என்று நினைத்துக்கொள்வோர் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். சங் அமைப்பு ஏற்கனவே இடதுசாரி வரலாற்றாசிரியர்களையும் “மேற்கத்தியமயமாக்கப்பட்ட” இளைஞர்களையும் குறிவைத்து வருகிறது. நாளை அது ஸ்கர்ட் அணியும் பெண்கள், இறைச்சி சாப்பிடுவோர், மது அருந்துவது, வெளிநாட்டுப் படங்களைப் பார்ப்பது, கோயில்களுக்கு வருடாந்திர யாத்திரை செல்ல வேண்டாம், பற்பசை, அலோபதி மருத்துவர்கள், முத்தம் அல்லது கை குலுக்கல் போன்றவற்றின் மீது வெறுப்பை ஏற்படுத்தும். ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்னால் போதும் என்பார்கள். யாரும் பாதுகாப்பாக இல்லை. இந்தியாவை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று நம்பினால் இதை நாம் உணர வேண்டும்.” இதுதான் அந்த வரிகள்.


இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் உடனடியாக பல ஆயிரம் லைக்குகளையும், ஷேரிங்குகளையும் பெற்றது. ஆனால் என்ன நடந்ததோ அந்த போஸ்ட் அகற்றப்பட்டது. இதன்பிறகு கங்குலியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்திலிருந்து ஒரு ட்வீட் வெளியானது.அதில், “இதுபோன்ற விவகாரங்களில் இருந்து சனாவை விலக்கி வையுங்கள். அந்த போஸ்ட் உண்மையில்லை. அரசியல் பற்றி அறிய முடியாத அளவுக்கு இளம் பெண் அவர்” என்று தெரிவிக்கப்பட்டது.

18 வயதான ஒரு பெண் வாக்குரிமை பெறும் நாட்டில், அரசியல் கருத்து கூற எதிர்ப்பு தெரிவிப்பதா, தாதா உங்களின் வேகம்தானே உங்கள் மகள் உடலில் ஓடும், கங்குலி நீங்கள் ஒரு நல்ல கேப்டனாக எப்படி அணி வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்து, அடித்து ஆட அனுமதித்தீர்களோ, அப்படி நல்ல தந்தையாக, உங்கள் மகளை இறங்கி விளையாட அனுமதியுங்கள்.. இப்படியெல்லாம், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள், கங்குலிக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!