ஒரே புடைவையில் குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்… நெஞ்சை பதற வைத்த காரணம்..!


அரக்கோணம் அருகே வரதட்சணை கொடுமையால் குழந்தையுடன் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரக்கோணம் அடுத்த மோசூர் கண்ணபிரான் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது32). சென்னை பெரம்பூர் மாநகர போக்குவரத்துக் கழக பஸ் டிப்போவில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா (22). இவர்களுக்கு அஸ்வதி என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தற்போது 1 1/2 வயது. ரம்யாவுக்கு திருமணத்தின் போது 25 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுத்தனர்.

ரம்யாவின் மாமனார், மாமியார் கூடுதலாக 3 பவுன் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரம்யா கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அக்கம் பக்கத்தில் யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தார். பெற்றோரிடம், மாமியார் வீட்டில் கூடுதலாக வரதட்சணை கேட்பது குறித்து செல்போனில் தகவல் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

நேற்று வழக்கம்போல் கணவர் சதீஷ் வேலைக்கு சென்றுவிட்டார். மாமியார், மாமனார் வெளியில் சென்றிருந்தனர். வீட்டில் ரம்யாவும், குழந்தை அஸ்வதி மட்டும் இருந்தனர். அப்போது மனமுடைந்த ரம்யா குழந்தையுடன் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீடு திரும்பிய மாமனார், மாமியார் வீட்டுக்கதவை நீண்ட நேரமாக தட்டியும் ரம்யா திறக்காததால் சந்தே கமடைந்தனர். கதவை உடைத்து கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்ததில் குழந்தைகளுக்கு ஊஞ்சல் கட்டும் கொக்கியில் புடவையால் ரம்யா தூக்குமாட்டி இறந்த நிலையில் கிடந்தார். இதில் அதிர்ச்சியடைந்து அருகில் சென்றபோது, மேலும் ஒரு பேரிடியாக தாயின் உடலில் மறைத்தபடி குழந்தையும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தது.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் அண்ணாதுரை, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ரம்யா, அஸ்வதி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி 3 வருடம் ஆவதால் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் விசாரணை நடத்தி வருகிறார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!