பிரியாணிக்காக மனைவியை உயிரோடு கொளுத்திய கொடூர கணவன்…!


கூத்தாநல்லூர் அருகே பிரியாணி செய்து தராததால் மனைவியை தீ வைத்து எரித்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடி ஜீவா தெருவில் வசித்து வந்தவர் சித்திரைவேல்(வயது 41). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கற்பகம்(32). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. மதுசூதனன்(8) என்ற மகன் உள்ளான்.

சித்திரைவேல் அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். சித்திரைவேலுவின் தங்கைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சித்திரைவேல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் பிரியாணி சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளனர்.

இதை பார்த்த சித்திரைவேல் தனது மனைவி கற்பகத்திடம் தனக்கு தங்கை வீட்டில் இருந்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுத்துள்ளார். அங்கு சென்று வாங்கி வரவில்லை என்றால் நீ வீட்டில் பிரியாணி செய்து கொடுக்க வேண்டும் என கூறி மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

அதற்கு கற்பகம், பிரியாணி செய்வதற்கான பொருட்கள் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரைவேல், கற்பகத்தை பிடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர் வீட்டுக்குள் இருந்த மண்எண்ணெயை எடுத்து வந்து அவரது மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

இதில் தீயின் வெப்பம் தாங்க முடியாமல் கற்பகம் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரியாணி செய்து கொடுக்காததால் மனைவியை தீவைத்து எரித்து கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!