வீதியில் கேட்பாரற்று நின்ற 11 ஆயிரம் வாகனங்கள் இத்தனை கோடிக்கு ஏலமா..?


சென்னை சாலைகளில் கேட்பாரற்று நின்ற கார், மோட்டார் சைக்கிள் உள்பட 11 ஆயிரம் வாகனங்கள் மாநகராட்சி சார்பில் ரூ.3 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

சென்னை மாநகர சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கேட்பாரற்ற வாகனங்கள் மாநகராட்சி சார்பில் போலீஸ் உதவியுடன் அப்புறப்படுத்தப்பட்டது.

நடைபாதையோரங்களில் இருந்த மோட்டார்சைக்கிள் ஆட்டோகள், கார், வேன் உள்ளிட்ட 10 ஆயிரத்து 954 வாகனங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் குவித்து வைக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது.

அனைத்து வாகனங்களும் ரூ.3 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது. இதில் 75 சதவீதம் தொகை சென்னை மாநகர போலீஸ் துறைக்கு சி.சி.டி.வி. கேமராக்கள் வாங்க செலவிட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக 3,079 வாகனங்கள் ஏலம் விடப்பட்டதில் கிடைத்த ரூ.91.11 லட்சம் தொகையில் 75 சதவீதம் ரூ.68.33 லட்சத்துக்கான காசோலையை சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் நேற்று வழங்கினார்.

சென்னை மாநகர சாலைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த இந்த பணம் செலவிடப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சென்னை மாநகர சாலையோரங்கள், நடை பாதைகளில் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கேட்பாரற்ற 10, 954 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது.

இதன் மூலம் ரூ.3 கோடியே 5 லட்சம் மாநகராட்சிக்கு வருமானமாக கிடைத்தது. இதில் 75 சதவீதம் தொகை சி.சி.டி.வி. கேமராக்கள் வாங்க சென்னை போலீஸ் துறைக்கு வழங்கப்படுகிறது.

முதற்கட்டமாக தற்போது ரூ.68.33 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. கேட்பாரற்ற வாகனங்கள் மீட்கப்பட்டு ஏலம் விடப்பட்டதன் மூலம் சென்னை மாநகர சாலை தற்போது சுகாதாரமாக காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!