எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்… ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி


எனது மகள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது’ என உயிரிழந்த ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி. முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப் நேற்று மாலை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமி‌‌ஷனர் ஈஸ்வர மூர்த்தியை சந்தித்து பேசினார்.

அப்போது லத்தீப்பிடம் நீண்ட நேரம் ஈஸ்வரமூர்த்தி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வெளியே வந்த லத்தீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது மகளின் சாவு குறித்து ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெறும் விசாரணை எனக்கு திருப்தியாக உள்ளது. கோட்டூர்புரம் போலீசார் முதலில் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. எனது மகளின் சாவு தற்கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது. எனக்கு கிடைத்த தகவல்படி இந்த வழக்கில் 13 கேள்விகள் எழுந்துள்ளது.

அதனடிப்படையில் தான் எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறேன். மகள் இறந்த அறையை கோட்டூர்புரம் போலீசார் முறையாக ஆய்வு செய்யவில்லை. தடயங்களை சேகரிக்கவில்லை. செல்போன், லேப்-டாப் போன்றவற்றை முதலிலேயே எடுத்துச்சென்று ஆய்வு செய்யவில்லை. சம்பவம் நடந்த அறையை ‘சீல்’ வைக்கவில்லை.

எனது மகளுடன் தங்கியிருந்த இன்னொரு மாணவி அன்றைய தினம் எங்கே போனார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. சம்பவம் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. அதை பற்றியும் விசாரிக்கவில்லை.

அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யவில்லை. இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தற்கொலைக்கான அறிகுறிகள் எனது மகள் உடலில் இல்லை. எனவே முறையான விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!