மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் அம்ரபாலி மோசடி விவகாரம்… கிரிக்கெட் வீரர் டோனி சிக்குவாரா?


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு அம்ரபாலி மோசடி விவகாரத்தில் பிரச்சினை வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான டோனி, இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

இளம் வீரரான பாண்ட் கொடுத்த வாய்ப்பை எல்லாம் சரியாக பயன்படுத்தாததால், தற்போது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவரும் ஒருவேளை சொதப்பினால் மீண்டும் டோனி இந்திய அணிக்கு வரலாம் எனவும் வரும் ஜனவரி மாதம் முதல் டோனியை, மீண்டும் சர்வதேச போட்டியில் பார்க்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் அம்ரபாலி மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வீடு வழங்குவதாக கூறி ஆயிரக்கணக்கான கோடிகளை ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்ரபாலி குழுமத்திற்கு எதிரான புகாரில் டோனியையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளனர். டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு நவம்பர் 27 அன்று தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர் இந்த கோரிக்கையை தெளிவாகக் கூறியுள்ளது.

அம்ரபாலி குழுமத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான அனில் குமார் சர்மா, குழு அதிகாரிகள் சிவ் பிரியா, மோஹித் குப்தா மற்றும் பலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்திய தண்டனைச் சட்டத்தின் 406, 409, 420 மற்றும் 120 பி பிரிவுகளின் கீழ் நம்பிக்கை மீறல், மோசடி மற்றும் குற்றச் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டோனிக்கும், இந்த அம்ரபாலி நிறுவனத்திற்கு என்ன தொடர்பு ? டோனி, இதற்குள் எப்படி வந்தார் என்பதை பார்ப்போம்.

கடந்த 2003-ஆம் ஆண்டு அம்ரபாலி குழுமம் அனில் குமார் என்பவரது தலைமையில் தொடங்கப்பட்டது. இது, ரியல் எஸ்டேட் துறை நிறுவனமாக விளங்கியது.

அம்ரபாலி மோசடி விவகாரத்தில் அனில்குமார் ஒரு முக்கிய காரணம் என்றால் இந்த குழுமத்தின் விளம்பர தூதராக இருந்த டோனியும் ஒரு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் டோனியை விளம்பர தூதராக வைத்து அவரை காட்டியே பல வீடுகளை இந்த நிறுவனம் விற்றுள்ளது. ஒரு பக்கம் இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் வளர்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் அந்த குழுமம் ரியல் எஸ்டேட் தாண்டி கல்வி, பொழுதுபோக்கு, எஃப்எம், சிஜி மற்றும் ஓட்டல் என சகல வியாபாரத்திலும் வளர்ந்துவிட்டது.

அம்ரபாலி ரியல் எஸ்டேட் நிறுவனம் டோனியை வைத்து விளம்பரம் செய்து மக்களிடம் இருந்து பணத்தை பெற்றிருக்கிறார்கள்.சொந்த வீடு வாங்குவதற்காக மக்களும் தங்களது பணத்தை அந்த நிறுவனத்தை நம்பி கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். டோனியின் விளம்பரத்தை வைத்து பலரிடம் பணத்தை கோடிக்கணக்கில் அம்ரபாலி நிறுவனம் பெற்றுள்ளது. ஆனால் வீடுகளை சொன்ன நேரத்தில் கட்டிக் கொடுக்கவில்லை. அவர்களுக்கான வீடும் அங்கில்லாததால், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தங்களுக்கு வீடு வேண்டும், இல்லையென்றால் பணம் வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். நொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 42,000 பேர் கொடுத்த 2647 கோடி ரூபாய் பணத்தை அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், முதன்மை இயக்குனர் மற்றும் சில இயக்குனர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன் பின், கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி ரூபேஷ்குமார் என்பவர் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மட்டுமின்றி டோனியும் இதில் விளம்பர தூதராக சம்பந்தப்பட்டவர். எனவே அவரையும் இந்த மோசடி வழக்கில் முக்கிய நபராக பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அறிக்கை தாக்கல் செய்தார்.

குறிப்பாக டோனியை பயன்படுத்தி தான் இந்த பணத்தை அவர்கள் பறித்து விட்டார்கள். இந்த குற்றத்திற்கு டோனியும் ஒரு உடந்தைதான் என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டு அந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தின் முடிவு என்னவாக இருக்கும்? டோனி மோசடி வழக்கி முக்கிய நபராக சேர்க்கப்படுவாரா? என்பது விசாரணையின் முடிவில் தெரியும்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!