4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது எப்படி? விசி சஜ்னாருக்கு குவிகிறது பாராட்டுக்கள்.!


தெலுங்கானா பெண் டாக்டர் கொலை குற்றவாளிகள் போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி கொண்டு ஓடியதால் 4 பேரும் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர். இதனால் போலீசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் அவர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர்.

இந்த கொடூர சம்பவத்தில் சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் மக்கள், முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கூடியிருந்த உள்ளூர்வாசிகள், ‘போலீஸ் வாழ்க ‘ “டி.சி.பி வாழ்க , ஏ.சி.பி வாழ்க” என கோஷங்களை எழுப்பினர். சிலர் ரோஜா இதழ்களை மழையாக பொழிந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

பாலியல் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீஸ் கமிஷனர் விசி சஜ்னாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்போது சைபராபாத் போலீஸ் கமிஷனராக பதவி வகித்து வரும் விசி சஜ்னார் தான், பெண் கால்நடை மருத்துவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்ட தகவலை உறுதிப்படுத்தியவர்.

அவருடைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தான் இந்த என்கவுண்டர் நிகழ்ந்துள்ளது. எனவே விசி சஜ்னாருக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 2008-ல் நடந்த என்கவுண்ட்டரின் போது, சில விமர்சனங்கள் எழுந்தாலும், அதே பாணியிலான என்கவுண்ட்டர் ஒன்றை சைபராபாத் போலீசார் அரங்கேற்றியிருப்பதால் விசி சஜ்னார் பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!