விரைவில் எதிர்க்கட்சி தலைவராகிறார் சஜித் பிரேமதாசா..!


இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட சஜித் பிரேமதாசாவின் பெயரை அவரது கட்சி தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிவில் சஜித் பிரேமதாசா, கோத்தபய ராஜபக்சேவிடம் தோல்வி அடைந்தார். இதையடுத்து, ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் பதவியை சஜித் பிரேமதாசா ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு அதிபராக பதவியேற்றுக் கொண்டார். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா விரைவில் நியமிக்கப்பட உள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற கட்சி கூட்டத்தில் இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே அளித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!