ஒரேயொரு ஊசி போட்ட போலி டாக்டர்… பிளஸ் 2 மாணவி துடிதுடித்து மரணம்..!


சேலத்தில் காய்ச்சலுக்கு ஊசி போட்ட பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலி டாக்டர் வீட்டிற்கு சீல் வைத்த அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி 8-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் ஸ்வேதா (வயது 16). கெங்கவல்லி அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்வேதாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட் டது. இதையடுத்து அவரது பெற்றோர் நடுவலூர் கிராமத்தில் உள்ள ஜெயபால் என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்று ஸ்வேதாவுக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது ஸ்வேதாவுக்கு, ஜெயபால் இடுப்பில் 2 ஊசி போட்டார். ஆனாலும் ஸ்வேதாவுக்கு காய்ச்சல் குணமாகவில்லை.

மேலும் ஊசி போட்ட இடத்தில் கட்டியாக மாறியது. காய்ச்சல் மற்றும் கட்டியால் அவதிப்பட்ட ஸ்வேதாவை கெங்கவல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் இடுப்பில் ஏற்பட்ட கட்டியை அகற்றினர். ஆனால் மறுநாளே ஸ்வேதா திடீரென இறந்தார். இதுகுறித்து நடுவலூர் கிராமத்தில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தபோது ஜெயபால் போலி டாக்டர் என்பதும், அவரது தவறான மருத்துவ சிகிச்சையால் ஸ்வேதா இறந்ததாகவும் புகார்கள் எழுந்தது. இதற்கிடையே ஜெயபால் தலைமறைவாகி விட்டார்.

கெங்கவல்லி அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தேவராஜன், கெங்கவல்லி பொலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஜெயபாலை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக் டர் தேவராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் நடுவலூர் கிராமத்தில் உள்ள போலி டாக்டர் ஜெயபாலின் வீட்டை சோதனை செய்தனர். பின்னர் அவரது வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் இது போல வேறு யாருக்காவது ஜெயபால் சிகிச்சை அளித்ததில் பாதிக்கப்பட்டார்களா? என்பது குறித்தும் மருத்துவ குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!