10 நாட்களாக தொடர் காய்ச்சல்… 8 வயது சிறுமி பரிதாபமாக மரணம்..!


திருச்செந்தூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலைக் கிணறு பகுதியை சேர்ந்தவர் சுயம்பு. இவர் கூலித் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு ரோசிலி என்ற மனைவியும், அனு என்ற 8 வயது பெண் குழந்தையும், சுனில் (வயது 21) என்ற மகனும் உள்ளனர்.

இதில் அனு அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அனுவிற்கு கடந்த 10 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததாக தெரிகிறது.

உடனே அவரை திருச்செந்தூர் அருகே உள்ள பிச்சுவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். ஆனால் காய்ச்சலின் தீவிரம் குறையாததால் சிறுமியை திருச்செந்தூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல், நாளுக்கு நாள் சிறுமியின் நிலைமை மோசமாகி வந்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரையின்பேரில் சிறுமி மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். சுனில் பிறந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு அனு பிறந்துள்ளார். இதனால் சிறுமி இறந்ததும் அவரது பெற்றோர் கதறி அழுதது பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது. சிறுமி மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சுகாதார துறையினர் சென்று ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவியுள்ளதா எனவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!