இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது – மழை நீடிக்க வாய்ப்பு


வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2-ம் தேதிவரை தமிழகம், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரி கடல் பகுதி மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர்களுக்கான உடல் திறன் தகுதித்தேர்வு வரும் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்பனை, கூத்தங்குழி உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது மேற்கு, வடமேற்கு திசையில் அரபிக்கடலை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் டிசம்பர் 2-ம் தேதிக்கு பிறகும் மழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!